Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஆளுநருக்கு சட்டமே தெரியவில்லை..” போட்டு உடைக்கும் எதிர்க்கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாகப் பிறப்பித்த உத்தரவை 5 மணிநேரத்திற்குள் திரும்பப் பெற்றுள்ளார் ஆளுநர் ஆர் என் ரவி. ஏனென்றால், அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில்தான் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் ஆளுநர் ரவி.

ஆளுநர் தனக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள விதிகளைப் பின்பற்றாமல், தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் முன்வைக்கிறார்கள்.

ஆளுநர் பின் வாங்கியதற்கு என்ன காரணம்? வல்லுனர்கள் சிலரிடம் கேட்டோம்.

 Governor Ravi withdrew the order to remove Senthil Balaji from the post of minister

ஆளுநருக்கு அதிகாரமே இல்லை - பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ், "அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை ரத்து செய்வதாக அறிவித்த உத்தரவை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப்பெற்றுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இவர் ரத்து செய்வதாக அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் அவரது முந்தைய நடவடிக்கைக்கு சட்டரீதியாக எந்த அதிகாரமும் கிடையாது. அதிகாரமே இல்லாத ஒருவர் அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வெளியிட்ட அறிக்கை அது.

ஒருவேளை தனது நடவடிக்கையை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அரசியலில் எந்த மாற்றத்தையும் அவரது அறிவிப்பு ஏற்படுத்தியிருக்காது. ஏனெனில் ஆளுநருக்கு அதிகாரமே இல்லை. ஆனால் தனக்கு அதிகாரம் உள்ளதாகக் கருதிக்கொண்டு வெளியிட்ட வெற்று அறிவிப்பு அது.

சுருக்கமாகச் சொன்னால், ஆளுநராக இருப்பதற்கு ஒரு அடிப்படைத் தகுதிகூட இல்லாதவர் ஆளுநர் ரவி. அதைத்தான் இந்த அறிவிப்பு மூலம் நாம் புரிந்துகொள்கிறோம். ஆளுநர் பதவி என்பது ஒரு பெரிய மனிதத் தன்மையோடு செயல்படக் கூடிய பதவி.

அவர் இத்தனை ஆண்டுகாலம் தனது பதவியில் பெற்ற அனுபவ முதிர்ச்சியை முதல்வருடன் சேர்ந்து பகிர்ந்துகொண்டு, மாநில நலனின் முன்னேற்றத்திற்காகச் செயல்பட வேண்டும். அவர் தனது பதவியை மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்குமான பாலமாக இருந்து செயல்படுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். அந்தக் கடமையைத்தான் அரசியல் அமைப்புச் சட்டம் அவருக்கு வழங்கி இருக்கிறது.

 Governor Ravi withdrew the order to remove Senthil Balaji from the post of minister

ஒரு அரசியல் சாசன சட்டத்தின்படி ஆளுநராகத் தான் பதவியில் இருப்பதாக ரவி நினைத்துச் செயல்படவில்லை. அதற்கு மாறாக ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டராகவே தன்னை நினைத்துக்கொண்டு செயலாற்றிவருகிறார். அதனால்தான் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுகின்றன..

எப்போதும் அவர் தன்னை ஒரு சனாதனியாகவே கருதிக்கொண்டு தன் பதவியைப் பயன்படுத்துகிறார். பதவியைப் பயன்படுத்தி சனாதன கருத்துகளைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டுபோய் பரப்ப முயன்று வருகிறார்.

அதனால்தான், அவமானங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் அவர் ஆளாகிறார்.

முதலில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக அவர் ஓர் உத்தரவை வெளியிடவேண்டிய அவசியமே இல்லை, அதைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கவேண்டிய தேவையும் இல்லை. இதனால் தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரமாக நடந்த வீண் களேபரங்களுக்கு எல்லாம் அவர் காரணமாகி இருக்கிறார். ஓர் உயர்பதவியில் உள்ளவர் செய்கின்ற காரியமா இது? அந்தப் பதவிக்கு அழகா இது?" என்கிறார்.

 Governor Ravi withdrew the order to remove Senthil Balaji from the post of minister

வரலாற்றில் முன்னுதாரணம் இல்லை- ரவிக்குமார் விசிக எம்.பி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், "அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அல்லது முரணாகச் செயல்படுவது ஆளுநருக்குப் புதிதல்ல; தமிழ்நாட்டில் அவர் ஆளுநராகப் பதவியேற்ற நாளிலிருந்தே இதைத்தான் செய்துவருகிறார். முதலில் பாஜக அரசின் கைப்பாவையாக இருந்து செயல்பட்டார்.

ஆனால், அவர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது என்பது அவர் ஒன்றிய அரசையும் கலந்தாலோசிக்காமல் செய்திருக்கிறார் என்று இப்போது அம்பலமாகி இருக்கிறது. ஆளுநர் என்பவர் சட்டத்தில் வல்லுநராக இருக்கவேண்டும் என்பதில்லை. மிகச் சாதாரணமான யாரையும் ஆளுநராக நியமிக்க முடியும்.

அதனால்தான், ஓய்வுபெற்ற அதிகாரிகளையும் கட்சியில் பதவிக் கொடுக்க முடியாதவர்களையும் ஆளுநராக ஒன்றிய அரசு நியமிக்கிறது. ஓர் உத்தரவை வெளியிடுவதற்கு முன்னால், சட்டப்படி அது சரியானதுதானா? என்பதை அவர் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர்களை ஆலோசிக்கலாம் அல்லது மாநில அரசின் வழக்கறிஞர்களைக் கலந்து ஆலோசிக்கலாம்.

அப்படி இல்லை எனில் முன்னாள் நீதிபதிகளைக்கூட கேட்கலாம். இப்படி ஆலோசனை செய்ய ஆளுநருக்குப் பல வசதிகளைச் சட்டம் வழங்கியுள்ளது. அதை எதையுமே பயன்படுத்திக் கொள்ளாமல் இவர் தன்னிச்சையாகவே ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறார். பிறகு அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்பதும் திரும்பப் பெறுகிறார்.

சொல்லப்போனால் ஆளுநர் ரவி, வரலாற்றில் முன்னுதாரணமே இல்லாத ஒரு நடவடிக்கையை எடுக்கிறார். ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவரை அழைத்து சில அறிவித்தல்களை வழங்கி இருப்பதாகத் தெரிகிறது. அப்படி என்றால், இது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கை என்பதை ஒன்றிய அரசு உணர்ந்துள்ளது என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 75 ஆண்டுகளில் ஒன்றிய அரசால் பலமுறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. ஏன், திமுக அரசே 2 முறை கலைக்கப்பட்டுள்ளது. இப்படி மனம் போன போக்கில் மாநில அரசுகளைக் கலைப்பதற்கு 1994 ஆம் ஆண்டு கர்நாடக மாநில பொம்மை வழக்கில், 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தடை விதித்தது. அதன்பிறகுதான் மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்படுவது குறைந்தது.

இதற்கு முன்னதாக மாநில அரசுகள் அம்மாநில ஆளுநரால் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் அமைச்சரை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ததாக வரலாறே கிடையாது. ஏன் கிடையாது என்றால், அதற்குச் சட்டத்திலே இடமில்லை. ஆகவே வரலாறும் கிடையாது.

இது சாதாரணமான அடிப்படை புரிதல். ஆளுநருக்கு அதுகூட தெரியவில்லை என்றால், என்ன சொல்ல?

ஆளுநராகப் பதவி வகிக்கின்ற ஒருவருக்கு இருக்கவேண்டிய நிதானமோ, மாண்போ, அதற்குரிய அரசியல் சட்ட அறிவோ அல்லது அதைக் கேட்கக்கூடிய அணுகுமுறையோ ஆர்.என்.ரவியிடம் இல்லை. ஆகவே அவர் ஆளுநர் பொறுப்பில் நீடிப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை; இந்தியாவிற்கே கேடாகப் போய் முடியும்.

அதை உணர்ந்து ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிப்பதுதான் சரியான முறை. உள்துறை அமைச்சகம் அதைச் செய்யவேண்டும். அதைச் செய்யும்படி நாம் வலியுறுத்த வேண்டும்" என்கிறார்

 Governor Ravi withdrew the order to remove Senthil Balaji from the post of minister

மனோஜ் நருல்லா வழக்கு சொன்னது என்ன? - வில்சன் கேள்வி

வழக்கறிஞரும் திமுக எம்பியுமான வில்சன், "ஆளுநர் இந்த உத்தரவு தொடர்பாகச் சட்ட வல்லுநர்கள் யாரையுமே கலந்தாலோசிக்கவில்லை என்பது தெரிகிறது. கலந்து ஆலோசிக்க வேன்டும் என அரசியல் சாசன சட்டம் விதி 163 சொல்கிறது. ஓர் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரமே கிடையாது. அதைச் சட்டம் 164 தெளிவாகக் கூறுகிறது. அமைச்சரைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு.

ஆளுநர் தன் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக இரவே தகவல் வெளியானது. அப்படி என்றால், அவர் உள்துறையையும் ஆலோசிக்கவில்லை. உள்துறை அமைச்சரையும் ஆலோசிக்கவில்லை. சட்ட வல்லுநர்களையும் ஆலோசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

தனக்குத் தோன்றியதை எல்லாம் ஆளுநர் கடிதமாக எழுதிக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் அரசுக்கு அவர் நெருக்கடியை உண்டாக்குகிறார். இவரது தனிப்பட்ட விருப்பத்தை எல்லாம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது. அவர் சட்டவிதிமுறைகள் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரை விசாரித்து வருகிறார்கள். இன்னும் அவர் குற்றவாளி என்பது நிரூபணம் ஆகவில்லை. விசாரணை மட்டுமே நடந்துவருகிறது.

அவரை நீதிமன்றம் குற்றவாளி எனக் கூறினால் மட்டுமே அவரது பதவியைப் பறிக்கலாம். அதைத்தான் சட்டம் சொல்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறி இருக்கிறது.

ஆனால், செந்தில் பாலாஜி மீது விசாரணை நடக்கும்போதே பதவியை விட்டு விலக்குகிறார் ஆளுநர் ரவி. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் படி விசாரணையில் உள்ள ஒருவரைப் பதவி நீக்கம் செய்யச்சொல்லவே இல்லை. அப்படி என்றால், ஆளுநர் ஏன் இதைச் செய்கிறார்?

 Governor Ravi withdrew the order to remove Senthil Balaji from the post of minister

மனோஜ் நருல்லா வழக்கில் என்ன சொல்லி இருக்கிறது என்றால், ஒரு அமைச்சர் மீது விசாரணை நடக்கிறது, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆகவே அவரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி முதலமைச்சருக்கு உத்தரவு போட முடியாது என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறது.

ஆனால், ஆளுநர் ரவி விசாரணை நடப்பதால் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கக் கூடாது என்கிறார். அப்படி என்றால், ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதை நான் சொல்லவில்லை. பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படி என்றால், ஆளுநர் ரவி பிரதமருக்கு இவர்களைப் பதவி நீக்கம் செய்யுங்கள் என்று ஏன் எடுத்துச் சொல்லக் கூடாது.

முதலமைச்சருக்கு எவ்வளவோ வேலைகள் உள்ளன. அர்த்தமற்ற ஆளுநரின் கடிதத்திற்காகப் பதில் எழுதிக் கொண்டிருக்க முடியுமா? காலையில் ஒரு கடிதம் எழுதுகிறார். மாலையில் அதை மாற்றி எழுதுகிறார். இதற்கு எல்லாம் முதலமைச்சர் பதில் எழுதிக் கொண்டிருப்பாரா?" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+