பெருங்களத்தூர் துள்ளுது.. இனி தாம்பரம் வரை யாரும் வராதீங்க.. தமிழக அரசு சூப்பர்.. சென்னை மகிழ்ச்சி
சென்னை: கோடை காலத்தை நோக்கி தமிழகம் நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தாம்பரம் மக்களுக்கு குட்நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. என்ன அது?
தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரை, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.

தாம்பரம்: இதில், 5 மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகள் உள்ளன. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களிலும் சரி, இயற்கை சீற்றங்களின்போதும் சரி, அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படக்கூடியது சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான தாம்பரமும் இதில் அடக்கம்.
அதனால்தான், மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக, தாம்பரம் - முடிச்சூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமுறை எழுந்துள்ளது.
தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையானது, தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வரை கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகிறார்கள்.. ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், இவைகள் தவிர மற்ற துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்றவற்றுக்காக சாலைகள் தோண்டப்பட்டு கிடப்பதால், இவைகளை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் பெருத்த முயற்சியை எடுத்து வருகிறது.
குடிநீர்: அதேபோல, குடிநீர் வசதியிலும் தாம்பரம் மாநகராட்சி கவனத்தை செலுத்தி வருகிறது.. தாம்பரம் பகுதி மக்களின் குடிநீா் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக மெட்ரோ குடிநீா் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், லட்சுமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்க தொட்டிக்கு, பம்மல் பகுதியிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீா் கொண்டு வருவதற்கான பணிகளும் துரிதமாகி வருகின்றன. இந்த நீர்த்தேக்க குழாய்கள் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், லட்சுமிபுரம், நாகப்பா நகா் உள்ளிட்ட 50,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
அதிரடி: இப்படிப்பட்ட சூழலில், தாம்பரம் மாநகராட்சி இன்னொரு அதிரடியை தற்போது கையிலெடுத்து வருகிறது.. இதுகுறித்து மாநகராட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தரமான வணிக சேவைகளை வழங்குதல், பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தியாவசிய வணிக சேவைகளை மேம்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு மூலதன மான்ய திட்டத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருங்களத்துர், காமராஜர் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்: 27 கடைகள் கொண்ட இந்த வணிக வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின் கடந்த 24ம் தேதி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த வணிக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 27 கடைகளும் விரைவில் ஏலம் விடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரபோகிறது.
அதுமட்டுமல்ல, இதன் மூலம் பெருங்களத்துர் பகுதியில் வசிக்கும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க தாம்பரம் மார்க்கெட் பகுதி வரை செல்லாமல், பெருங்களத்தூர் பகுதியிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டு பயன்பெறுவார்கள் என்று தாம்பரம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: ஒவ்வொருமுறையும், பொருட்களை வாங்குவதற்கு, பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம் வரை வந்து சென்று கொண்டிருந்த மக்களுக்கு, இப்போது பெருங்களத்தூரிலேயே எல்லா பொருட்களும் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications