"துண்டு சேருதோ".. ராகுலுக்காக ஓடோடி வந்த சீமான்.. "ஓபனாகவே நடக்குது அநீதி".. உற்று கவனிக்கும் பாஜக
சென்னை: "அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக சனநாயக ஆற்றல்கள் ஒன்றுதிரண்டு, பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் அறைகூவல் விடுத்துள்ளதுடன், ராகுல் காந்திக்கும் ஆதரவு தந்துள்ளது வியப்பை கூட்டி வருகிறது.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. ஒட்டுமொத்த காங்கிரசும் அதிர்ந்து போயுள்ளது. இதனால், பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களையும், அதிருப்திகளையும் வலிய பதிவு செய்து வருகிறார்கள்..
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், நாம் தமிழர் சீமானும் ஆதரவு அளித்துள்ளார். இதுகுறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

கருத்துரிமை
அந்த அறிக்கையில், தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியதற்தாக காங்கிரசு கட்சியின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்திருக்கும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவகையிலும் ஏற்புடையதல்ல! இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை எனும் அடிப்படை உரிமையையே முற்றாகப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை முழுமையாக எதிர்க்கிறேன். இத்தோடு, அவரது மக்களவை உறுப்பினர் பதவியும் முழுமையாகப் பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான சனநாயக விரோதமாகும்; வெளிப்படையாக நிகழ்ந்தேறும் கொடும் அநீதியாகும்.

குரல் வளை
நாட்டையாளும் பாஜக அரசு தனது அதிகாரப்பலத்தைக் கொண்டு, அத்துமீறலும், அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலைத் தொடர்ச்சியாக அரங்கேற்றுவது ஏற்கவே முடியாத பெரும் கொடுங்கோன்மையாகும். மக்களாட்சிக் கோட்பாட்டுக்கெதிரான பாஜக அரசின் இப்படுபாதகச்செயல்கள் நாட்டுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் தீங்காகும். மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வழுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும்.

முகத்திரை
இந்திய அரசியலமைப்பின் பிரதான தத்துவமான அதிகாரப்பகிர்தல் (Separation of Powers) என்கிற உயர்ந்த நடைமுறைக்கு எதிரான நடவடிக்கைகள் சனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் என்றால் மிகையாகாது. அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக சனநாயக ஆற்றல்கள் ஒன்றுதிரண்டு, பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்'" என்று சீமான் அதில் தெரிவித்துள்ளார்.

பேராபத்து
சீமானை பொறுத்தவரை, தீவிரமான காங்கிரஸ் எதிர்ப்பாளர் ஆவார்.. பாஜகவை எந்த அளவுக்கு விமர்சிக்கிறாரோ, அதே அளவுக்கு காங்கிரஸையும் விமர்சிப்பவர்.. பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதி வருகிறது நாம் தமிழர் கட்சி.. "பாஜக - காங்கிரஸ் இவங்க 2 பேரும் ஒன்றுதான்" என்று அடிக்கடி சொல்லி வருபவர் சீமான்.. "இரண்டு கட்சிகள் இடையே கொள்கை ஒன்றுதான்.. ஆனால் கட்சிகள் மட்டுமே வேறு.. பணமதிப்பிழப்பீடு தவிர்த்து சிஏஏ, என்ஆர்சி, என்ஐஏ, ஜிஎஸ்டி, நீட் தேர்வு இவைகளை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அவற்றை செயல்படுத்தியது பாஜக. 2 பேருமே பேராபத்தை நோக்கி நாட்டை நடத்துபவர்கள்" என்று மேடைக்கு மேடை சீமான் முழங்கி வருபவர்.

அதிரடி சீமான்
அதனால்தான், மற்ற தொகுதிகளைவிட, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும், எப்போதுமே கூடுதலாக கவனம் செலுத்தி, பிரச்சாரங்களிலும் ஈடுபடும் நாம் தமிழர் கட்சி. அந்தவகையில், ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளையும் பிரிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது நாம் தமிழர் கட்சி.. 10 நாட்களுக்கு முன்பு,கூட, திருப்பத்தூரில் செய்தியாளர்களை சீமான் சந்தித்து பேசியிருந்தார்.. அப்போது, "பாஜகவும், சீமானும் தான் வடமாநிலத்தவர்கள் பிரச்சனைக்கு காரணம் என அழகிரி சொல்கிறாரே? என்று கேட்டதற்கு, "அது அவர் அரைவேக்காடு என்பதை நிரூப்பிக்கிறது. ராகுல் காந்தியை முதலில் என்னிடம் பேச சொல்லுங்கள்" என்று காட்டமாக கூறியிருந்தார்.

சிரிப்புதான் வருகிறது
நேற்றைய தினம் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போதும் ராகுல் காந்திக்கு சீமான் ஆதரவு தந்திருந்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. "ஒருவர் பிரதமரானால் அவரை விமர்சிக்கவே கூடாதா? அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என்று கோர்ட்டே கூறியிருக்கிறது.. அப்படியிருக்கும்போது, சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏன் தண்டனை தந்துள்ளது? அதை படிக்கும்போது சிரிப்பு தான் வருகிறது" என்று கூறியிருந்தார் சீமான்.

டைம் இருக்கே
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை, பாஜகவை தவிர அனைத்து கட்சிகளுமே கண்டனத்தை பதிவு செய்து கொண்டிருக்கின்றன.. அதிமுகவின் மூத்த தலைவர் வைகைச்செல்வன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், 30 நாள் அப்பீலுக்கு டைம் இருக்கும்போது, இத்தனை அவசரமாக ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்ற கேள்வியை வெளிப்படுத்தியிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.. தீவிரமான அரசியல் எதிரி என்றாலும், இந்த விஷயத்தில் பாஜக செய்தது தவறு என்பதை அதிமுகவை போலவே சீமானும் சுட்டிக்காட்டி உள்ளதாகவே தெரிகிறது.

மாறுதே சீன்
அதேபோல, பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை 2 நாட்களாகவே சீமான் வலியுறுத்தி வருகிறார்.. அப்படி ஒரு மாற்று அணி உருவானால், அந்த அணியுடன் கூட்டணி குறித்து அப்போது யோசிப்போம் என்றும் சீமான் கூறியுள்ளார்.. அதாவது 10 வருடம் கழித்து கூட்டணி என்ற கேட்டகரிக்குள் நாம் தமிழர் நுழைவதாக தெரிகிறது.. பாஜகவுக்கு எதிரான அணி என்றால், அது நிச்சயம் காங்கிரஸ் அல்லாத அணியாக இருக்காது.. ஒருவேளை காங்கிரசுடன் சீமான் நெருங்கி வருகிறாரா? அல்லது ராகுல் காந்தியின் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஆதரவை தெரிவித்து வருகிறாரா? என்றெல்லாம் ஆனால், தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளரான சீமானின், இன்றைய ஆதரவு அறிக்கையானது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது..!!












Click it and Unblock the Notifications