வேதாந்தாவின் ஸ்டெர்லைட் வழக்கு ஜுன் 20ம் தேதி விசாரணை.. வைகோ, பாத்திமா மனு விசாரணைக்கு ஏற்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை வரும் ஜுன் 20ம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் வைகோ மற்றும் பாத்திமா ஆகியோரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவும் அன்றைக்கு விசாரிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி, அந்த பகுதி மக்கள் பல
ஆண்டுகளாக போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.

இதனால் போலீசார் கலவரக்காரக்கார்களை ஒடுக்குவதாக கூறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த
சம்பவத்தால் தூத்துக்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல்வைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசின்
அரசாணையை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டெர்லைட் ஆலையால் சுறறுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா ஆகியோரும் மனு
தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை ஏற்றுக்கொண்டதுடன், இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் வழக்கை வரும் ஜுன் 20ம் தேதி விசாரிப்பதாகக் கூறி அன்றைக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications