சொத்து குவிப்பு வழக்கு.. அதிமுக ஆட்சி vs திமுக ஆட்சி.. ஐகோர்ட் நீதிபதி சொன்ன முக்கியமான விஷயம்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், முன்னதாக முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டது. அதாவது சொத்து குவிப்பு வழக்கை கடந்த ஆட்சியில் வேறு மாதிரி விசாரித்தனர், திமுக ஆட்சியில் வேறு மாதிரி நடந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனித வளம் மேம்பாட்டுத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி வகித்து வருகிறார். இவர் மீது அதிமுக ஆட்சி காலத்தில் அதாவது கடந்த 2012ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால்சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதாவது, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி மு க, ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ,76.40 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு மீது அவருடைய மனைவி மணிமேகலை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை செசன்சு நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு தந்தது.
இதேபோல தமிழ்நாட்டில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகிக்கும் சாத்தூர் ராமச்சந்திரன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விருது நகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்த வழக்கு என்னவென்றால். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி மு க, ஆட்சிகாலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி மற்றும் அவருடைய நண்பர் கே.எஸ் பிசண்முகமூர்த்தி ஆகியோர் ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கினை பல வருடங்களாக விசாரித்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை செசன்சு நீதிமன்றம், வழக்கில் இருந்து சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி உள்பட 3 பேரையும் விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை செசன்சு நீதிமன்றம், இரு அமைச்சர்களையும் விடுவித்து பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தாமாக முன்வந்து வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். இதுதொடர்பாக இரு அமைச்சர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். இதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த 2 வழக்குகளையும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்தினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது தவறானது அதை ரத்து செய்கிறேன். வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார், மேலும் செப்டம்பர் 9ல் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், செப்டம்பர் 11 ல் அமைச்சர் தங்கம் தென்னரசு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தினசரி அடிப்படையில் வழக்குகள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் விசாரணையில் எந்தவித தலையீடும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்றும் இதனை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மறு விசாரணைக்கு என்ன காரணம்: இந்த வழக்கின் விசாரணையில் பெரும் மாற்றங்கள் நடந்துள்ளதாகவும், அமைச்சர்களாக அவர்கள் இல்லாத காலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்த போது (அதிமுக ஆட்சி காலத்தில்), ஒரு மாதிரியான அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாகவும், பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் (திமுக ஆட்சி காலத்தில்), கூடுதல் விசாரணை நடத்தப்பட்டதில் குற்றச்சாட்டுகள் இல்லை என்றும், எனவே அவர்கள் மீதான கைவிடுவதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தார். மேலும் இதன் காரணமாகவே வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதாகவும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications