"யோகி காலில் நாங்கள் விழவில்லை".. கமலுக்கு ஆதரவாக ரஜினியை தாக்கிய நடிகை வினோதினி! ரசிகர்கள் மோதல்
சென்னை: அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை. யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததில்லை. ஈஷா யோகம் கண்டதில்லை என்று நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்தை சீண்டி நடிகை வினோதினி போட்ட பதிவு எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் ஆகி உள்ளது. வினோதினியின் இந்த பதிவால் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ரசிகர்கள் மோதி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வருகிறார். 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில் இந்த கட்சி களமிறங்கினாலும் கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.

மேலும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக வழங்கி உள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக இதுதொடர்பாக வெளியான செய்தி கார்டை டாக்டர் ரவி என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் செயல்பட்டு வருபவர் பதிவிட்டு இருந்தார். அதில், ‛‛இந்த குரூப்-ல டூப் வேற காமெடி பண்ணிட்டு'' என கிண்டல் செய்திருந்தார். அதாவது மக்கள் நீதி மய்யத்தை கிண்டல் செய்யும் வகையில் அவரது பதிவு இருந்தது.
இதனை பார்த்ததும் நடிகை வினோதினி கடும் கோபம் அடைந்தார். இவர் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயல்பட்டு வரும் நிலையில் அந்த நபருக்கு உடனடியாக பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக நடிகை வினோதினி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை. ஆதித்யநாத் காலில் விழுந்ததில்லை. இகழ்ந்து பேசாதோர் நம் தொண்டர். ஈஷா யோகம் கண்டதில்லை. உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் எதிர்த்த போராளி சாவுகள் நாட்டை சுடுகாடாக்கும், போராளிகள் தீவிரவாதிகளென சொல்லவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் தராமலிருந்ததில்லை.
எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று பஞ்ச் பேசாமல் வந்துவிட்டோம். ஏழ்மை இந்தியாவில் பணமதிப்பிழப்பை ஆதரிக்கவில்லை. ஐநூறு கோடி வசூலிருந்தும் ஆறரை லட்ச சொத்து வரி செலுத்தாமலில்லை. ஒருநாளும் சரியான வருமான வரி கட்டாமலிருந்ததில்லை. So ஓரமாய் போய் அழவும், அஃது உத்தமம்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இதன்மூலம் வினோதினி நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். இதற்கு முக்கிய காரணம் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டத்தை விமர்சித்த நபர் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் போட்டோவை வைத்திருந்ததும், பயோவில் ThalaivarForLife என வைத்திருந்ததும் தான் காரணம். அவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதால் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தது மற்றும் எதிர்கொண்ட பிரச்சனைகளை குறிப்பிட்டு நடிகை வினோதினி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வினோதினியின் இந்த பதிவுக்கு மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் ரசிகர்கள் ஆதரவாகவும், நடிகர் ரஜினியை விமர்சித்ததும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மறுபுறம் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள், நடிகர் கமல், நடிகை வினோதினி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் வினோதினியின் பதிவின் கீழே நடிகர் ரஜினி - நடிகர் கமல் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications