முத்திருச்சே.. நிர்மலா சீதாராமன் VS சு.வெங்கடேசன் கடும் வாக்குவாதம்! வார்த்தை போரால் சூடான ட்விட்டர்
சென்னை: அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா கைது செய்யப்பட்டதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து இருந்த நிலையில் தற்போது, அவருக்கும் சு வெங்கடேசனுக்கும் இடையே ட்விட்டரில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டார். அதில், "தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா தனது ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டார். அவர் கைது கண்டனத்திற்குறியது." என்று குறிப்பிட்டார்.

இதற்கு மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் ட்விட்டரில் "பொய்யையும், பீதியையும் பரப்புவதா ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜீவ் சந்திரசேகர்களின் வேலை? மதுரை மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற பேரூராட்சி இருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு கூட கருத்துச்சொல்ல முடியாதா? வதந்தி உங்களின் ஆயுதம். உண்மை எங்களின் கவசம்." என்று குறிப்பிட்டு விரிவான அறிக்கையையும் பகிர்ந்து இருந்தார்.
அதில், "பொய்யை, பீதியை பரப்புவதா மத்திய அமைச்சர்களின் வேலை. ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர். மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்கு பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி.
மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திர பயன்பாட்டைக் கொண்டு வர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய ஒன்றிய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைத் தளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது.
பிரச்சினை என்ன? மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு. வெங்கடேசன் கள்ளமௌனம் காக்கிறார் என்பது தான். ஒரு நிதி அமைச்சருக்கு அப்படி ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று கூட பார்த்து விட்டு கருத்துகூற முடியாதா?
இன்னொருவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சர். அந்த இலாகாவை "பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில் நுட்ப அமைச்சர்" என்று மாற்றி விடலாமா? முழுவதும் வதந்தியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதட்டத்தை உருவாக்கும் என்பதுதான் பிரச்சினை. ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது.
இதில் வேடிக்கை என்னவெனில் கருத்து சுதந்திரம் பற்றி ஒன்றிய அமைச்சர்கள் பேசி இருப்பதுதான். உலகில் " இணையதள முடக்கம்" செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்திருப்பவர்கள். கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் இரத்த வெள்ளத்தில் மிதந்த போதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண். பொய் உங்கள் ஆயுதம். உண்மையே என்றும் எங்களின் கவசம்." என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த நிர்மலா சீதாராமன், "மதிப்பிற்குறிய நாடளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்களே, எஸ்ஜி சூர்யா கைதானது 'பொய்யா'? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை தமிழ்நாடு முதலமைச்சர் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது 'பீதியை பரப்புவதா'? ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை." என்று பதிலளித்து இருந்தார்.
அவரது கருத்தை ரீட்வீட் செய்து சு வெங்கடேசன் மீண்டும் பதிலளித்து உள்ளார். அதில், "மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லையே என்பதை தாண்டிச் செல்வது பொய்க்கு துணை போவதில்லையா, பீதிக்கு உதவி செய்வதில்லையா மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களே! ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அபாண்ட பழி சுமத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா? உண்மையை கடப்பதும் பொய்யின் மாறுவேடமே." என்று தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications