மாறிய வானிலை..6 மாவட்டங்களில் அடி வெளுக்கப்போகும் கனமழை..காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா?
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் 25 ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலம் முடிவுக்கு வரப்போகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. காக்காச்சி, மாஞ்சோலை , ஊத்து பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 21.12.2022 முதல் 24.12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 25ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இன்றைய தினம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளைய தினம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
23 மற்றும் 24ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
25ஆம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications