சென்னையே திணறுது.. கடுமையான டிராஃபிக் ஜாம்! குரோம்பேட்டையில் இன்ச் இன்ச் ஆக நகரும் வாகனங்கள்!
சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாகவும், சொந்த ஊர்களுக்குச் செல்வோர் பலர், தென் மாவட்டங்களை நோக்கி வாகனங்களில் செல்வதன் காரணமாகவும் இன்று இரவு மிகக் கடுமையான டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதன் காரணமாக முக்கிய சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும். கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே, சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்குத்தான்.

எனினும், இப்போதும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இன்று குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சில கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து வருகின்றன.
தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், சென்னை புறநகர் ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநக்ர் ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை மட்டுமே இயங்குகின்றன. அதேபோல, செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வரையே ரயில்கள் இயங்குகின்றன. இதன் காரணமாகவும், சொந்த ஊர்களுக்குச் செல்வோர் பலர், தென் மாவட்டங்களை நோக்கி தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதன் காரணமாகவும் இன்று இரவு மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வார இறுதி நாள் மற்றும் ஆடிப்பெருக்கு என்பதால் மக்கள் கடற்கரைகளுக்கு சென்றுவிட்டு திரும்பி வருவதன் காரணமாகவும் இந்த கடும் நெரிசல் எனக் கூறப்படுகிறது. தாம்பரம் - குரோம்பேட்டை இடையே பராமரிப்புப் பணி காரணமாக மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து அதிகரித்ததால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த 2 வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்கள் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை அகற்றிவிட்டு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வகையில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஏற்கனவே, தாம்பரத்தில் 9 நடைமேடைகள் உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை சுமார் 63 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 70 சிறப்புப் பேருந்துகள் ல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரையும், தாம்பரம் முதல் தியாகராய நகர் மற்றும் பிராட்வே வரையும் இயக்கப்படுகிறது.
வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் இந்த 70 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுவதால் தாம்பரம், பல்லாவரம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரம், பல்லாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையங்களில் அதிகப்படியான பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய வந்திருப்பதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications