அமலாக்கத்துறை ஆக்ஷனுக்கு அணை போட முயன்ற திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.. மொத்தமாக தள்ளுபடி செய்த ஐகோர்ட்
சென்னை: அமலாக்கத்துறைக்கு எதிராக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட அதே சமயம், அமலாக்கத்துறை அதிகாரிகளும் அடையாறு கஸ்தூரிபா நகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீட்டுக்கு வந்தனர். வருமான வரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்ததாக கூறப்பட்டது. அங்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை, ஆய்வு செய்து, அது தொடர்பாக, ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, மீண்டும் அடுத்த நாளும் ஜெகத்ரட்சகனின் வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா, வெளிநாடுகளில் முதலீடுகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. ஐடி ரெய்டு நடக்கும்போதே அமலாக்கத்துறையும் அதிரடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ஒருபுறம் வருமான வரி சோதனையும், மறுபுறம் அமலாக்கத்துறை விசாரணையும் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
சிங்கப்பூர் நிறுவனம் மூலம் இலங்கையில் ரூ.70 லட்சம் முதலீடு செய்ததாக அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தங்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications