அங்கே காங்கிரசுக்கு "வேட்டு" வைக்கும் திமுக! இங்கே பாஜகவிடம் அடிபணியும் அதிமுக! மொத்த அரசியலே மாறுதே
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் தமிழ்நாடு அரசியலில் அதனால் பெரிய மாற்றம் ஏற்பட போவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன. . மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சரத் பவார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கூட்டணியில் கரம் கோர்த்து உள்ளனர்.\

ஆனால் இந்தியா கூட்டணியை மதிக்காமல் இந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தனியாக நிற்க முயன்றது. முக்கியமாக வடக்கில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் இரண்டிலும் காங்கிரஸ் தனியாக நின்றது. மத்திய பிரதேசத்தில் கூட்டணியை சட்டசபை தேர்தலில் தொடர காங்கிரஸ் விரும்பவில்லை. அங்கே வலுவாக இருக்கும் பகுஜன் சமாஜ் உடனே கூட்டணி இல்லை. இந்திய கூட்டணியில் பகுஜன் சமாஜ் இல்லை.
குறைந்தபட்சம் இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதேபோல் ராஜஸ்தானிலும் இந்திய கூட்டணி கட்சிகளுடன் இணையாமல் தேர்தலை சந்தித்தது காங்கிரசின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்தியா கூட்டணி முக்கியத்துவம்: இப்போது 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்து இருப்பது.. காங்கிரசுக்கு இந்திய கூட்டணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அதோடு இல்லாமல்.. காங்கிரசுக்கு தான் பெரிய தேசிய கட்சி என்று இருக்கும் மிதப்பை உடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி பெரிய பாடத்தை, மிகப்பெரிய அளவில் தன்னடக்கத்தையும் கூட கொடுக்கும்.
திமுகவிற்கு நல்ல செய்தி: அதோடு இல்லாமல் கூட்டணி கட்சிகளிடம் அதிக இடங்களை கேட்க முடியாத நிலையை காங்கிரசுக்கு இது கொடுக்கும். மாநிலங்களில் வலிமை இன்றி காணப்படும் காங்கிரஸ்.. மாநில கட்சிகளிடம் அதிக இடங்களை கேட்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
திமுகவிற்கு கூட்டணி ரீதியாக கூடுதல் பவரை கொடுக்கும். திமுக கொடுக்கும் இடங்கள்தான் இறுதி, அவர்கள் வைப்பதே கூட்டணியில் சட்டம். காங்கிரஸ் நினைத்த இடங்களை கேட்டு வாங்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும்.
2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு கடந்த முறை போல 10 இடங்களை கொடுக்காமல் 7 இடங்களுக்குள் சுருக்கும் முடிவில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் காங்கிரசின் தோல்வி.. திமுகவிற்கு கூட்டணி ரீதியாக அதிக பவரை கொடுக்கும்.
அதிமுக அடிபணிகிறது: இங்கே திமுக காங்கிரசை பெட்டியில் அடைக்க உள்ள நிலையில் இன்னொரு பக்கம் பாஜகவிடம் அதிமுக அடிபணிந்து செல்ல இருக்கிறதாம்.
அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.
இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
புதிய கூட்டணி: அதேபோல் 2024 லோக்சபா தேர்தல் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த வகையில்தான் புதிய கூட்டணி அமைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாராம். அதன் ஒரு கட்டமாக பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு போன் செய்து பேசி வருகிறாராம்.
சுமுகமாக செல்லும் பாஜக: இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம். நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக வென்றுள்ளது. அதே சமயம் தெலுங்கானாவிலும், மிசோராமிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
கர்நாடகாவை தொடர்ந்து தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான தெலங்கானாவிலும் காங்கிரஸ் காலூன்றியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிபிஐ 1 இடத்தில் வென்றது. ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில்தான் வென்றது. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் பிஆர்எஸ் கட்சி பறிகொடுத்தது. இங்கே பாஜக வெறும் 6 இடங்களை வென்று படுதோல்வி அடைந்துள்ளது.
தொடர் தோல்வி: தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.
2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். இதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூலம் சமாதானம் பேச உள்ளனர்.
அழைப்பு: அதன்படி உத்தர பிரதேசத்தில் கட்டப்படும் ராமர் கோவில் அடுத்த ஜனவரியில் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடிக்கு அழைப்பு செல்ல உள்ளது. இந்த அழைப்பிதழ் மூலம் எடப்பாடிக்கு சமாதானம் சொல்ல யோகி வழியாக தூது விட மோடி திட்டமிட்டு உள்ளாராம். தேர்தலுக்கு ஜனவரியில் இருந்து 4 மாதமே இருக்கும் நிலையில்.. ஜனவரியில் கூட்டணியை இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,












Click it and Unblock the Notifications