ஒருவர் தான் குற்றவாளியா.. சென்னை காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்? நீதிபதிகள் எழுப்பிய கேள்வி
சென்னை: புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஒருவர் தான் குற்றவாளி என்று சென்னை காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்? கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது? முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் அதற்கு யார் பொறுப்பு? என்பது உள்ளிட்ட கேள்விகளை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் சென்னை காவல் ஆணையருக்கு, உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் இன்று மாலை விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் வெளியிட்டது சட்டவிரோதம் என்றும், முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டதை காவல் ஆணையரை ஒப்புக்கொண்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் கைது செய்யப்பட்ட நபர் மீது 20 வழக்குகள் உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், அவர் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவையும் மீறி முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இடைக்காலமாக இந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக இந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமே உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆனால் பல வழக்குகள் உள்ளன. அவற்றையும் விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அவற்றை பார்ப்போம் ..
புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஒருவர் தான் குற்றவாளி தான் என்று சென்னை காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்?
கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது?
அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் அரசு அனுமதி பெற வேண்டுமா?
முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் அதற்கு யார் பொறுப்பு ?
மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
நிர்பயா நிதி செலவு செய்யப்பட்ட விபரங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும்.
குற்றவாளி 10 ஆண்டுகள் அண்ணா பல்கலை வளாகத்தில் உலவி வருவதாக சொல்கிறார்கள்.. அதை விசாரித்தீர்களா ?
பல்கலைக்கழக விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன.. இவ்வாறு கேள்விகளை நீதிபதிகளை எழுப்பினார்கள்..












Click it and Unblock the Notifications