“பேருக்குள்ளே காந்தம் உண்டு.. உண்மைதானடா!” 50 ஆண்டுகளாக ரசிகர்களை ஸ்டைலால் கட்டிப்போடும் ரஜினிகாந்த்
சென்னை: சூப்பர் ஸ்டார் என்றதும் உடனடியாக ரஜினிகாந்த் தான் நம் நினைவுக்கு வருவார். ரஜினி என்றால் ஸ்டைல், ஸ்பீட் மற்றும் மாஸ் ஆகியவை யாராலும் மறுக்க முடியாத அடையாளங்கள். சாதாரண நடிகராக தமிழ்த் திரையுலகில் நுழைந்து, கடின உழைப்பால் தனக்கான தனி பிராண்டை உருவாக்கியவர் ரஜினிகாந்த். இன்று, அவரது வெற்றிப் பயணம் ஓர் அதிசயக் கதை.
மொழி தெரியாத ஊருக்கு வந்து அந்த மக்களின் மனதை வெல்வது என்பது சாதாரண காரியம் இல்லை. தமிழ் சினிமாவில் நுழைந்து மக்கள் மனதில் தன் பெயரை நிலைநிறுத்தி, எவரும் யூகிக்காத வெற்றியைப் பெற்றார். மேலும், நிறவெறி அதிகமாக இருந்த கால கட்டத்தில், கருப்பு நிறத்துடன், பரட்டைத் தலையோடு, ஒல்லியான தோற்றத்துடன் தமிழ் சினிமா உலகில் காலடி வைத்தார்.

அவரின் திறமையை உணர்ந்து அவருக்கு வாய்ப்பு அளித்த மனிதர் கே. பாலச்சந்தர். அன்று இருந்த கடுமையான காலச் சூழல், சமூக மற்றும் திரையுலக விரோத சூழ்நிலைகளுக்கு மத்தியில், தனது கருப்பு தேகத்தையும், சாதாரண தோற்றத்தையும் மறந்து, மாஸ் பாதையை முதன்முதலாக உருவாக்கி அதனை வெற்றிப் பாதையாக மாற்றியவர் ரஜினிகாந்த் தான்.
அந்த காலத்தில் திரையுலகில் சாதனை படைக்க மிகக் கடினமான சூழல் இருந்தது. ஆனால், தனது திறமை, உழைப்பு மற்றும் மக்களைக் கவரும் தனித்துவ பாணியால், மாஸ் கதாநாயகன் என்ற அடையாளத்தை கட்டமைத்தார். இன்றைக்கு அதே பாதையில் பலர் நடந்து மாஸ் காட்டுவது எளிதாகத் தோன்றலாம். ஆனால் அந்த அடித்தளத்தை அமைத்ததில் ரஜினியின் பங்கு போல் தனித்துவமானது எதுவும் இல்லை.
ஸ்டைல் & மாஸ்
ரஜினிகாந்தின் வேகமான நடிப்பு, ஸ்டைலான உடர்மொழி, அவரது பேச்சு மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த தனித்தன்மை மக்கள் மனதை கவரத் தொடங்கியது. ஆரம்ப காலங்களில் வில்லன் வேடங்களில் நடித்தாலும், ரஜினியின் தனிச்சிறப்புகள் அவரை ஒரு ஹீரோவாக மக்கள் மனதில் உயர்த்தின. அவ்வகையில் அவர் நடித்த படங்களில் வில்லனாக இருந்தாலும், கதாநாயகனை விட ரஜினியை மக்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
இதன் காரணமாக, உச்சத்தில் இருந்த கதாநாயகர்களும் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்க தயங்கினர். இந்நிலையில், ரஜினிகாந்துக்கு முதன்முறையாக கதாநாயகனாக வெளிப்பட வாய்ப்பு கிடைத்த படம் பைரவி. இந்த படத்தின் மூலம் அவரின் ரசிகர்கள் பட்டாளம் உருவாகத் தொடங்கியது. அதன்பின்னர் 'முள்ளும் மலரும்’, 'தீ’, 'பில்லா’ போன்ற படங்கள் அவரை தமிழ் சினிமாவின் கதாநாயக சக்தியாக மாற்றின.
ரஜினியின் சாதனை
தமிழ் திரையுலகில் 74 வயதிலும் இன்றைய தலைமுறைக்கு தகுந்த உச்ச சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் நாயகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் வரலாற்றில்
அதிக வசூலாக '2.0’ மற்றும் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்’ ஆகிய படங்கள், தமிழ்த் திரைத்துறையின் உச்சத்தை அடைந்த முக்கிய படைப்புகள் என்ற பெருமையை பெற்றுள்ளன. அதிக இடைவெளி இன்றி ஒரே மூச்சில் திரைப்படங்களை உருவாக்கும் அவரின் வேகம், இன்றைய எந்த நடிகனும் ஒப்பிட முடியாத நிலையை அடைந்திருக்கிறது.
பல இண்டஸ்ட்ரி ஹிட் படங்களை வழங்கியுள்ள ரஜினிகாந்த், தன்னுடைய தனித்துவமான நடிப்பு, மாஸ் வசனங்கள் மற்றும் உலகளாவிய வரவேற்புடன் தமிழ் சினிமாவை முன்னேற்றி உள்ளார்.
தமிழ் சினிமாவை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்திய முதல் முன்னோடி என்ற பெருமையும் ரஜினிக்கு உண்டு.
வெளிநாடுகளிலும் ரஜினி
வெளிநாடுகளில் தமிழ்த் திரைப்படங்கள் பரவுவதற்கும் பெரும் வர்த்தக வெற்றியைப் பெற்றதற்கும் ரஜினி படங்களின் பங்கு முக்கியமானது. இந்திய திரையுலக வரலாற்றில், வெளிநாட்டு தியேட்டர்களில் இந்திய சினிமாவின் மதிப்பை உயர்த்தியவை ரஜினி படங்கள் என்றால் மிகையில்லை.
அந்த காலத்திலிருந்தே அவர் தன்னம்பிக்கையுடன் மேற்கொண்ட தன்னிகரில்லா முயற்சிகளே அவர் சூப்பர் ஸ்டாராக உயர காரணம். 50 வருடங்கள் கடந்தாலும், ரஜினியின் வெற்றிப் பயணம் ஒரு உன்னத கதை மட்டுமல்ல, அது இன்றும் மக்களை ஈர்க்கும் உயிருடனும் உற்சாகத்துடனும் நிறைந்த அனுபவம்.
ரஜினிகாந்தின் பயணம், மக்களின் மனத்தில் நிரந்தரமாக இடம்பிடித்துக் கொண்டுள்ளது. ரஜினியின் சாதனை இன்று பலருக்கும் ஒரு வழிகாட்டி. இந்த வெற்றியின் அடிப்படையில், இன்றும் இளம் இயக்குநர்களுடன் இணைந்து புதிய முயற்சிகளைக் கண்டுபிடிக்கும் ரஜினியின் செயல்பாடு, அவரது இன்றைய நிலையை மேலும் மேம்படுத்தியுள்ளது. உழைப்பும் மக்களின் ஆதரவும் அவரது வளர்ச்சிக்கு அடிப்படை காரணங்கள். அதனால், தமிழ் திரையில் ரஜினி என்ற பேருந்து ஓய்வின்றி பயணித்து கொண்டே இருக்கிறது.
உற்சாகமூட்டும் மனிதர்
ரஜினிகாந்த் தனக்கென ஒரு தனி அடையாளம் கொண்ட மனிதர். திரை, அரசியல், ஆன்மிகம் என எந்தவித நிகழ்ச்சியில் பேசினாலும், அவரது பேச்சு மக்களை கவரும் தன்மை கொண்டது. அவர் ஒரு மேடையில் நின்று பேசும்போது, மனதில் தோன்றியதை நேரடியாக தைரியமாக பகிர்ந்து மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறார். இது அவரின் நம்பிக்கையும், நேர்மையும் மிகுந்த குணத்தின் பிரதிபலிப்பு.
அவரின் பேச்சுகளில் உள்ள தெளிவு, நேர்மை மற்றும் எளிமை, ஒவ்வொரு வயதினரும் மகிழ்ந்து கேட்கும் வகையில் இருக்கும். அவரது உரைகளில் தத்துவமும், வாழ்வியலின் அடிப்படையும் கலந்திருக்கும். மேடையில் பேசும் போது ஒருவருடைய தோற்றம் மட்டுமல்ல, அவரது எண்ணங்களும் மக்களால் பெரிதும் கவனிக்கப்படுகின்றன என்பதை ரஜினிகாந்த் நிரூபித்துள்ளார். அவரது பேசும் திறமையும் உண்மையும் மக்கள் மனதில் நீடிக்கும். ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டாரின் மாஸ் பயணம் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு உணர்ச்சிகரமான உந்து சக்தியாகவே இருக்கும் என்பது உறுதி.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications