ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் சுற்றிய சதீஷ்.. சிக்கியது துப்பு.. 12 மணி நேரத்தில் கைதானது எப்படி?
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி சதீஷை தனிப்படையினர் கைது செய்தது எப்படி?
சென்னை ஆதம்பாக்கம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி வரலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சத்யா என்கிற சத்யபிரியா (20).
இவர் திநகரில் உள்ள கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர்கள் இருக்கும் குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தயாளன். இவரது மகன் சதீஷ் (23). பள்ளி பருவத்தில் சதீஷும் சத்யாவும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

சதீஷின் செயல்கள்
ஒரு கட்டத்தில் சதீஷின் செயல்கள் பிடிக்காததால் அவருடனான காதலை சத்யா முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ், அவ்வப்போது சத்யாவிடம் சென்று தன்னை மீண்டும் ஏற்குமாறு கேட்டாராம். ஆனால் இதற்கு சத்யா மறுத்துவிட்டாராம்.

மாப்பிள்ளை
மேலும் தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். எனவே இனி தன்னை வந்து காதல் என்ற பெயரில் தன்னை தொல்லை கொடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சத்யாவுக்கு கடந்த மாதம் வேறு ஒரு நபருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது சதீஷுக்கு தெரியவந்தது.

சத்யாவுடன் வாக்குவாதம்
இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ், சத்யாவை சந்தித்து இந்த கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டாம் என கூறியிருந்ததாக தெரிகிறது. இதற்காகத்தான் அவர் ரயில் நிலையம் வந்ததாகவும் தெரிகிறது. அப்போது இருவருக்கும் நிகழ்ந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த சதீஷ், சத்யாவை தண்டவாளத்தில் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில் ஏறியதில் சத்யாவின் தலை துண்டானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சதீஷை பிடிக்க முயற்சித்த போது அவர் தப்பியோடிவிட்டார். இந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடம் வந்த ரயில் நிலைய போலீஸார், சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சதீஷ் கைதானது எப்படி
மேலும் கொலை செய்த சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சதீஷின் செல்போனை ஆய்வு செய்த போது அவர் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் தனிப்படையினர் ஆய்வு செய்த போது அவரது புகைப்படம் பதிவாகியிருந்தத. இதையடுத்து தனிப்படை போலீஸார் சதீஷை சுற்றி வளைத்தனர். அவரை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்தனர். இதையடுத்து அவர் தாம்பரம் ரயில் நிலைய போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டது விசாரணை நடத்தப்படுகிறது.

சதீஷ் வாக்குமூலம்
இந்த நிலையில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில் "நானும் சத்யாவும் 5 ஆண்டுகளாக காதலித்தோம். பெற்றோரின் எதிர்ப்பால்தான் என்னுடனான காதலை சத்யா முறித்தார். இது தொடர்பாக அவரிடம் ரயில் நிலையத்தில் வாக்குவாதம் செய்த போது கோபத்தில் அவரை ரயில் தண்டவாளத்தில் பிடித்து தள்ளிவிட்டேன். அவருடன் சேர்ந்து நானும் தற்கொலை செய்யவிருந்தேன். ஆனால் என்னை பிடிக்க பொதுமக்கள் வந்ததால் நான் தப்பிவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். நேற்று 12 மணிக்கு நடந்த இந்த கொலை சம்பவத்தில் நள்ளிரவு 1 மணிக்கு அதாவது 12 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்ததற்கு தனிப்படையினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications