ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார்? அஞ்சலை சிக்கியது எப்படி?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பெண் தாதா அஞ்சலையை போலீஸார் கைது செய்தது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலை வழக்கில் திடுக் தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. அவரை ஆந்திராவில் எல்லாம் தனிப்படையினர் தேடி வந்த நிலையில் சென்னையிலேயே கைது செய்யப்பட்டது எப்படி என்பதை பார்க்கலாம். மேலும் விசாரணையில் போலீஸார் அவரிடம் கேட்ட கேள்விகள் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வேணுகோபால் பெருமாள் தெருவில் கட்டி வரும் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேரை கைது செய்தனர்.
இவர்களில் ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆயுதங்களை போலீஸாருக்கு காட்ட சென்ற போது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்தனர். இதில் அவர் இறந்தார். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அடுத்தடுத்து கைது நடவடிக்கையாக நடந்து வருகிறது.
திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தலைமறைவாக இருந்த அஞ்சலையை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
லைவன் ஆற்காடு சுரேஷின் காதலியான இவர், பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் அவர் திடீரென பாஜகவில் ஐக்கியமானார். அங்கு அவர் வடசென்னை மேற்கு மாவட்டத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பாஜகவை சேர்ந்த செல்வராஜையும் போலீஸார் தேடி வருகிறார்கள். வடசென்னையில் கஞ்சா விற்பனையில் முக்கிய நபராக திகழ்ந்தவர்.
கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாக இருந்த அஞ்சலையை அவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு அஞ்சலையை ரகசியமாக சந்திக்க வந்த போதுதான் ஆற்காடு சுரேஷ் போலீஸில் சிக்கி பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னர் பாஜகவில் இணைந்த அஞ்சலை தமிழக பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவியாக பதவி வகித்து வந்தார்.
இவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பிருப்பதாகவும் அவரை தேடப்பட்டு வந்ததாகவும் போலீஸார் கூறிய நிலையில் அவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அஞ்சலை நேற்று இரவு ஓட்டேரியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அஞ்சலை தனது கணவரின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பண உதவி செய்ததாக காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது. அஞ்சலை மீது கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, கொலை முயற்சி உள்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கு முக்கிய பங்கு இருந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
அஞ்சலையை தமிழக - ஆந்திர எல்லையோர பகுதிகளில் தேடி வந்த நிலையில் அவர் சென்னையிலேயே தலைமறைவாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்துதான் சென்னையில் தீவிரமாக தேடிய நிலையில் சென்னை ஓட்டேரி பகுதியில் தனது நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்ஸ்டாராங்கை கொலை செய்ய யாருக்கு எவ்வளவு பணத்தை வழங்கினார், மொத்தம் எவ்வளவு பணம் கைமாறியது, ரவுடி சம்போ செந்திலுக்கும் அஞ்சலைக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தெல்லாம் அஞ்சலையிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அண்மையில் கைதான மலர்க்கொடி, சதீஷ், ஹரிஹரன் ஆகிய மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
அப்போதுதான் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி யார் என்பது தெரியவரும். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் வடசென்னையின் பிரபல தாதா ஒருவருக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications