ஐஏஎஸ்ஸாக இருந்தால் முடியாது.. பாசிச சக்திகளை முறியடிக்கவே அரசியல்.. சசிகாந்த் செந்தில் அதிரடி
சென்னை: பாசிச சக்திகளை முறிடிக்க வேண்டும். அதனை ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து செய்ய முடியாது. இதனால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என திருவள்ளூர் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என 40 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாட்டில் 9 லோக்சபா தொகுதி + புதுச்சேரி என மொத்தம் 10 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. இந்த 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் (தனி) தொகுதி மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பியாக டாக்டர் கே ஜெயக்குமார் உள்ளார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அவருக்கு பதில் முன்னாள் கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் பாஜக கோட்டையை தகர்த்தவர்.. திருவள்ளூரில் களமிறங்கும் சசிகாந்த் செந்தில்! யார் இவர்
இந்நிலையில் தான் சென்னையில் திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஐஏஎஸ் பணியில் நான் இருந்தேன். இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நான் மக்கள் பணிக்காக வரப்போகிறேன். இன்றைய காலக்கட்டத்தில் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டும் என்றால் இந்த அமைப்பில் இருந்து கொண்டு தான் சண்டையிட முடியும். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து தான் என்னால் செய்ய முடியாது. இதனால் இன்னும் கூட பல இளைஞர்கள் சேர வேண்டும். என்னுடைய அரசியலில் ரொம்ப முக்கியமான பகுதியாக அதனை வைக்க போகிறேன்’’ என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தமிழகத்தை காப்பாற்ற பாஜக வெற்றி பெற வேண்டும்’’ என தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளாரே என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு சசிகாந்த் செந்தில், ‛‛தமிழகத்தை அவர்களிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும். தமிழகம் நன்றாக தான் இருக்கிறது’’ என பதிலளித்தார்.
திருவள்ளூரில் சிட்டிங் காங்கிரஸ் எம்பியை மாற்றம் செய்து சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் மிகவும் முக்கிய நகர்வாக பார்ககப்படுகிறது. ஏனென்றால் பொதுவாக தமிழகத்தில் வாரிசுகளுக்கும், 60 வயது கடந்தவர்களுக்கும் தான் அதிகளவில் சீட் வழங்கப்படும். ஆனால் அரசியல் பின்புலம் இல்லாத சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். அதன்பிறகு ஐஏஎஸ் பதவியை அவர் ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது அவர் அம்மாநில வார்ரூம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி தயாரிப்பிலும் பங்காற்றினார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் மாநில வார்ரூம் தலைவராக பொறுப்பேற்றார். அங்கு காங்கிரஸ் தோல்வியடைந்தது. இருப்பினும் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் மேலிடத்தின் நம்பிக்கையை பெற்றுள்ள நிலையில் திருவள்ளூரில் அவர் களமிறக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications