Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் பாஜக கோட்டையை தகர்த்தவர்.. திருவள்ளூரில் களமிறங்கும் சசிகாந்த் செந்தில்! யார் இவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில் போட்டியிட இருக்கும் நிலையில், யார் அவர்.. டெல்லி தலைமை இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தது என்பது குறித்து பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

Who is Sasikanth Senthil Former IAS Turned-Politician now contesting in tiruvallur

ஆனால், காங்கிரஸில் வேட்பாளர்கள் அறிவிப்பில் மட்டும் தாமதம் இருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுச்சேரி ஒன்பது இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த புதன்கிழமையே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.

வேட்பாளர்கள்: இருப்பினும், அதில் தாமதம் ஏற்பட்டது. பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு நேற்று இரவு வெளியானது. அதில் தமிழ்நாட்டில் ஏழு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றன. கரூர் மற்றும் சிவகங்கையில் ஏற்கனவே எம்பியாக இருக்கும் ஜோதிமணி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் களமிறங்குகிறார். திருவள்ளூர், கிஷ்ணகிரி, கடலூரில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

சசிகாந்த் செந்தில்: இதில் திருவள்ளூரில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். யார் இந்த சசிகாந்த் செந்தில் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.. கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை மிக நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்க காரணமாக இருந்தவர். அங்கே சட்டசபைத் தேர்தலுக்கு எப்படி பிரச்சாரம் செய்யலாம் என்பதை வடிவமைத்தவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்..

2009 பேட்ச் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் அங்கு தான் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். அவர் யுபிஎஸ்சி தேர்வுகளில் தேசிய அளவில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றார். 2009 முதல் 2012 வரை பல்லாரி மாவட்டத்தில் உதவி ஆணையராக பணியாற்றிய அவர், அதன் பின்னர் சிவமொக்கா பஞ்சாயத்தின் தலைமை நிர்வாகியாக இரண்டு முறை பணியாற்றினார்.

மணல் கொள்ளை: தொடர்ந்து சித்ரதுர்கா மாவட்டம் மற்றும் ராய்ச்சூர் மாவட்டத்தின் துணை ஆணையராகவும் இவர் பணிபுரிந்தார், அவர் பணியில் இருந்து விலகும் போது தட்சிண கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பணிபுரிந்து வந்தார், அப்போது வகுப்புவாத மோதல்கள் தட்சிண கன்னடா மெல்ல அதிகரித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது. மத பயங்கரவாத அமைப்புகளுக்கு மணல் கொள்ளை மூலம் நிதி செல்வதைக் கண்டறிந்த அவர் அதை முழுமையாகத் தடுத்து நிறுத்தினார்,

மேலும், மத ரீதியிலான மோதல்களையும் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்தார். 2017இல் அவர் துணை ஆணையராக வரும் போது தட்சிண கன்னடாவில் 42 வழக்குகள் மற்றும் 6 வகுப்புவாத வன்முறைகள் நடந்து இருந்தன. அதற்கு மறு ஆண்டே அதாவது 2018இல் அது 3 வழக்குகள் மற்றும் 3 நிகழ்வுகளாகக் குறைந்து இருந்தது.

மத ரீதியான மோதல்கள்: மேலும், சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கவும் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். தக்ஷன் கர்நாடகாவில் இருந்தபோது அதாவது செப். 6 2019இல் இவர் குடிமைப் பணியில் இருந்து விலகினார். பின்னர் இவர் காங்கிரஸில் இணைந்த நிலையில், அப்போதே பல பாஜக தலைவர்கள் இவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர். சசிகாந்த் செந்திலைத் துரோகி என்று சொன்ன பாஜகவின் ஆனந்த் குமார், அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்றும் விமர்சித்து இருந்தார்.

காங்கிரஸில் இணைந்த சசிகாந்த செந்தில் பாஜக ஆட்சி மற்றும் இந்துத்துவா அரசியலைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். 2020இல் காங்கிரஸில் இணைந்தாலும் அதன் பிறகு சில ஆண்டுகள் பெரியளவில் இவரது பெயர் வெளியே வரவில்லை. ஆனால், எங்கே குடிமைப் பணியில் இருந்தாரோ அதே கர்நாடகாவில் தான் இவரது அரசியல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்குச் சென்றது. கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸின் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கான தேர்தல் வியூகத்தை வெற்றிகரமாக வகுத்தார்.

கவனித்த டெல்லி தலைமை: 1980க்கு பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதில் முக்கிய பங்கு இருந்ததை யாராலும் மறுக்கவே முடியாது. அவரது இந்த செயல்பாடுகள் தேசிய தலைமையின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியது. குறிப்பாகக் கர்நாடகாவில் அவர் தேர்தல் வியூகத்தை வகுத்த போது அப்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக அவர் "40% கமிஷன் அரசு '' & "பேசிஎம்'' பிரச்சாரங்களை உருவாக்கினார். அது மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸுக்குத் தேர்தல் வியூகத்தை இவர் வகுத்தார். இருப்பினும், அங்கே அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மேலும், பாஜகவின் இந்துத்துவா அரசியலைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் சசிகாந்த் செந்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிஏஏ போராட்டக்காரர்களைச் சந்திக்க நாடு முழுவதும் பயணம் செய்தார்.

போட்டியிட வாய்ப்பு: காங்கிரஸ் கட்சியில் அவரது செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்தே வந்தது. சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பு வரை சசிகாந்த் செந்தில் பெயரும் தீவிர பரிசீலனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் அவர் திருவள்ளூர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+