அமோனியா கசிவால்.. அநியாயமாக பறிபோன உயிர்கள்! திருவள்ளூரில் நடந்தது என்ன? விபத்துக்கு காரணம் இதுதான்!
சென்னை: திருவள்ளூரில் இறால், மீன் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வாயு கசிவு காரணமாக பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
என்ன நடந்தது திருவள்ளூரில்? வாயு கசிவுக்கு காரணம் என்ன? என்பது குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்கு முன்பு
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் இறால்/மீன் போன்ற கடல் உணவுகள் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. டன் கணக்கில் இருக்கும் கடல் உணவுகளை பதப்படுத்த வேண்டும் எனில், அதை குளிர்விக்க வேண்டும். அதற்குதான் அமோனியா பயன்படுத்தப்படுகிறது. இது ஆபத்தான நச்சு வாயு ஆகும். இன்று காலை இந்த தொழிற்சாலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருக்கின்றனர்.
ஆலையின் பணிகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், மதிய நேரத்தில் திடீரென தொழிலாளர்கள் மயக்கம் போட்டு விழுந்துள்ளனர். சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொழிலாளர்களை மீட்டிருக்கிறார்கள்.
விபத்து நடந்தது எப்படி?
அமோனியா வாயு கசிவுதான் இதற்கு காரணம் என்பது தெரிந்த உடன், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில், இறால்களை பதப்படுத்தி வைக்கும் சேமிப்பு கிடங்கின், குளிரூட்டும் அமைப்பின் பிரஷர் வால்வில் ஏற்பட்ட கசிவுதான் விபத்துக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த லீக் ஏற்பட்ட உடன் அடர்த்தியான அமோனியா வாயு கசிந்திருக்கிறது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்திருக்கிறார்.
பாதிப்பின் தீவிரம்
அமோனியா மிக மோசமான வாயு. குறைந்த நேரத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். விபத்து நடந்த நேரத்தில் 120 தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருந்திருக்கிறார்கள். வாயுவை இவர்கள் சுவாசித்ததில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசு நடவடிக்கை
சம்பவம் நடந்த உடன் ஆலைக்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆலையை மூடி சீல் வைத்தனர். மறு உத்தரவு வரும் வரை ஆலையை திறக்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றனர். அதேபோல அலட்சியமாக செயல்பட்டு மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக பிரிவு 105 மற்றும் 125(a) கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆலையின் உரிமையாளர்கள் மோகன் மற்றும் ஜோசப் என இருவரை கைது செய்துள்ளனர்.
ஆய்வு குழு
விபத்து குறித்து ஆய்வு செய்ய தொழிலகப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு 24 மணி நேரத்தில் விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யும். தொடர்ந்து விரிவான அறிக்கையை அடுத்த 3 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
NDRF கட்டுப்பாட்டில் தொழிற்சாலை
தற்போது தொழிற்சாலை முழுவதும் தேசிய பேரிடர் மீட்புப்படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அடுத்த 3 நாட்களுக்கு, தொழிற்சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமோனியா பரவலை கட்டுப்படுத்தும் பணியை பேரிடர் மீட்புப்படை மேற்கொள்ளும்..
அமைச்சர்கள் ஆய்வு
முதலமைச்சர் விஜய் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று உறுதி செய்திருக்கின்றனர்.
அமோனியா வாயு கசிவு காரணமாக தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications