மக்களை கோவில் பக்கமே நெருங்கவிடாத விஜய்? திருச்செந்தூர் கோவிலில் எகிறும் கட்டணம்! பாஜக பரபர புகார்!
தூத்துக்குடி: புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தக் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அபிஷேகம், தங்கரத உலா, சண்முகார்ச்சனை உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோயிலில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றுவது குறித்து கோயில் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் கோயிலின் வருவாய் குறைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்களுக்கான கட்டணங்களை திருத்தி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில்
அதற்காக பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் வரவேற்கப்பட்டுள்ளன. அறிவிப்பின்படி, தற்போது ரூ.2,500 ஆக உள்ள தங்கரத உலா கட்டணம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட உள்ளது. அதேபோல் தங்கரத உலாவுக்கான வைப்பு நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படவுள்ளது. சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து நேரடியாக ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் கட்டண உயர்வு
இரண்டு நபர்கள் பங்கேற்கும் மூலவர் அபிஷேக சேவைக்கான கட்டணம் தற்போது ரூ.1,500 ஆக உள்ள நிலையில், அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது கால பூஜைக்கான கட்டணம் ரூ.1,500 இலிருந்து ரூ.6,500 ஆகவும், அதற்கான வைப்பு நிதி ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.90 ஆயிரமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
தரிசனக் கட்டணம்
அதேபோல் தற்போது சாதாரண நாட்களில் ரூ.500 மற்றும் விழா நாட்களில் ரூ.2,000 ஆக உள்ள அபிஷேக தரிசனக் கட்டணம், இனி அனைத்து நாட்களிலும் ஒரே கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது கருத்துகள் அல்லது ஆட்சேபனைகளை ஜூலை 7ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக கோயில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன்
இந்நிலையில் இந்த முன்மொழியப்பட்ட கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தமிழக மக்கள் கோவில்களை நெருங்கவிடாமல் தடுக்கத் திட்டமிடும் திரு. ஜோசப் விஜய் அரசு!
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சேவைக் கட்டணங்களை திரு. ஜோசப் விஜய் அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, கண்டனத்திற்குரியது. சண்முகார்ச்சனை, ஒன்பது கால பூஜை, அபிஷேக தரிசனக் கட்டணம் என அனைத்து சேவைகளுக்கான கட்டணத்தையும் மூன்று மடங்கு வரை உயர்த்தும் இத்திட்டம் கோவில் வருவாயைப் பெருக்கவா? அல்லது ஏழை எளிய நடுத்தர மக்களை சுப்பிரமணிய சுவாமிக்கு சேவை செய்ய விடாமல் தடுப்பதற்கா?
விஜய்
"கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே பயன்படுத்தப்படும்" என்று ஆளுநர் உரையில் முழங்கிவிட்டு, இன்று அடித்தட்டு மக்களை கோவில் பக்கமே நெருங்கவிடாதபடி கட்டணத்தை உயர்த்தத் திட்டமிடுவது தான் தூய சக்தியின் உண்மை முகமா? "அனைவருக்குமான அரசு இது" என்று முதல்வர் திரு. விஜய் அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், கோவில்களில் நிலவும் இதுபோன்ற தரிசன மற்றும் சேவைக் கட்டணமுறையை முதலில் கைவிட வேண்டும்! கோவில் வருவாயைப் பெருக்கும் நோக்கில் பக்த கோடிகள் மீது நிதிச் சுமையை ஏற்றாமல், மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications