விஜய்க்கு தலைவலி.. தவெகவில் பஞ்சாயத்து! முரண்டு பிடிக்கும் மா.செ.க்கள்! எகிறி அடிக்கும் எம்எல்ஏக்கள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கட்சியின் வளர்ச்சி வேகமாக இருக்கும், அதே நேரத்தில் உட்கட்சி மோதல்களும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் ஒருபுறமும், பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வந்த மாவட்ட செயலாளர்கள் மறுபுறமும் கோஷ்டிகளாக இருப்பதால் பல மாவட்டங்களில் மோதல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது இருந்து கட்சியை வளர்க்க பல நிர்வாகிகள் களத்தில் உழைத்தனர். ஆனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த பல முக்கிய தலைவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் ஏற்கனவே சீட் எதிர்பார்த்திருந்த பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவில் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த பலர் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றதோடு, சிலர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
இதன் பின்னர் பல மாவட்டங்களில் அதிகார மையம் மாறத் தொடங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் இதற்கான முதல் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிந்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளராக இருந்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலர் அருள்ராஜு-க்கு சீட் தராமல், தி.மு.க.,வில் இருந்து வந்த விஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆடியோ சர்ச்சையாக மாறியது. அந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உட்கட்சி மோதல்
விருதுநகர் மாவட்டத்தில் நிலைமை இன்னும் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் கீர்த்தனாவுக்கும் மாவட்ட செயலாளர் மாரிசெல்வத்துக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடு தற்போது வெளிப்படையான மோதலாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரு தரப்பினரும் தனித்தனியாக செயல்பட்டதாகவும், ஆதரவாளர்களுக்கு இடையே நேரடி மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்து
சென்னையிலும் இதே நிலை தொடர்கிறது. அப்புனுவின் தி.நகர் தொகுதியில் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்தும், ஆயிரம் விளக்கில் பிரபாகரும் போட்டியிட்டனர். இதனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தற்போது இருவரும் பவர் செண்டர் ஆகி விட்டதால், அப்புனுவை யாருமே மதிப்பதில்லை. இதனால் விரக்தியில் உள்ளார் அப்புனு. இதேபோல் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத மாவட்ட செயலாளர்கள் பலர் தற்போது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆதிக்கம் செலுத்துவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
உட்கட்சி பிரச்சினை
சில இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு ஒருவரை ஒருவர் அழைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் போஸ்டர்கள், பேனர்கள், பொதுக்கூட்ட ஏற்பாடுகள் போன்றவற்றிலும் போட்டி மனப்பான்மை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியின் அடிப்படை நிர்வாக கட்டமைப்பில் சலசலப்பு உருவாகியுள்ளது. காஞ்சிபுரம், வேலூர், கோவை, நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதேபோன்ற உட்கட்சி பிரச்சினைகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
குறிப்பாக மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக பழைய நிர்வாகிகள் குற்றம்சாட்டுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களோ தங்களது வெற்றிக்கு மக்கள் ஆதரவு தான் காரணம் என்று வாதிடுகின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மறைமுக போட்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல்
ஆட்சிக்கு வந்த பிறகு எந்த அரசியல் கட்சியிலும் அதிகார மோதல்கள் உருவாகுவது புதிதல்ல. ஆனால் அவற்றை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த தவறினால் அது கட்சியின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஒற்றுமை மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது.
விஜய்
இந்நிலையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இடையே உருவாகியுள்ள மோதல்களை கட்சித் தலைவர் விஜய் எவ்வாறு கையாளப் போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. ஆட்சியை கைப்பற்றிய சில மாதங்களிலேயே பல மாவட்டங்களில் உட்கட்சி பூசல் வெளிப்படையாக வெடிக்கும் நிலை உருவாகியிருப்பது, தமிழக வெற்றிக் கழக தலைமைக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications