நான் ஜாமீன் எடுக்கிறேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. தனிஷ்க் மீனாட்சிக்கு போன மெசேஜ்!
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோவிற்கும் அதிகமான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, இப்போது ஒரு குற்றச் சம்பவத்தையும் தாண்டி வேறு ஒரு கோணத்திற்கு சென்றுள்ளது. நம் தமிழ் சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு விவாதப் பொருளாக இந்த கிரைம் மாறியுள்ளது. அப்படி என்ன பாஸ் நடந்தது என்று கேட்கிறீர்களா?
தர்மபுரியில் முக்கியக் குற்றவாளி நிஷாந்த் கைது செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், சிறையில் உள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் நடந்து வரும் கூத்துகள் இணையவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளன.

சிறைக்குப் போனதும் எகிறிய ஃபாலோயர்ஸ்
நகைக்கடை கொள்ளைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததாகவும், நகைகளைப் பதுக்கி வைக்க உடந்தையாக இருந்ததாகவும் கைதான மீனாட்சி, தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்தான் இந்த வழக்கில் நம்பர் 2.
அவர் கைதான செய்தி வெளியான நாள் முதலே, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.52 லட்சத்திலிருந்து சுமார் 2 லட்சத்தை தாண்டி 3 லட்சத்தை நெருங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஆண்களின் கொடூர கமெண்ட்ஸ்
ஆனால், இதையெல்லாம் விட அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், மீனாட்சியின் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்குக் கீழே சில ஆண்கள் பதிவிட்டு வரும் கமெண்ட்கள் தான். ஒரு மெகா நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கும் ஒரு பெண்ணின் பதிவுக்குக் கீழே, நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன், கவலைப்படாதே, நான் வந்து உனக்கு ஜாமீன் எடுத்து வெளியே கொண்டு வருகிறேன், நீ வெளியே வந்ததும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ என நூற்றுக்கணக்கான ஆண்கள் வரிசை கட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
என்ன கொடுமை சார் இது?
இந்தப் போக்கு சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள், பெண்கள் மத்தியில் கடும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிய வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கிறார். அவர் செய்தது மிகப்பெரிய குற்றம்.
ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வெறும் இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதற்காகவும், அழகாக இருக்கிறார் என்பதற்காகவும் 'கல்யாணம் செய்து கொள்கிறேன், ஜாமீன் எடுக்கிறேன்' என்று வழிவது என்ன மாதிரியான மனநிலை? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கியமான கோணத்தையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு பெண் குற்றச் செயலில் ஈடுபட்டவர் என்பதால் சமூக வலைத்தளங்களில் அவரை எளிதில் கேலி செய்யலாம், ஆபாசமாகவோ அல்லது வரம்பு மீறியோ கமெண்ட் போடலாம் என்ற எண்ணம் சிலரிடம் காணப்படுகிறது.
அவள்தான் ஏற்கனவே திருட்டு வழக்கில் சிறைக்குப் போய்விட்டாளே, இனி அவள் பக்கம் யார் பேசப் போகிறார்கள்? என்ற தைரியத்தில், பலரும் தங்களது வக்கிரமான எண்ணங்களையும், மோசமான ஆசையையும் அந்தப் பெண்ணின் கமெண்ட் பாக்ஸில் கொட்டி வருகின்றனர்.
ஒருபக்கம் குற்றத்தை நியாயப்படுத்துவது போலவும், மறுபக்கம் அந்தப் பெண்ணை ஒரு போகப்பொருளாகப் பார்த்து சீண்டுவது போலவும் இந்த கமெண்ட்கள் அமைந்துள்ளன.
சினிமாக்களிலும், வெப் சீரிஸ்களிலும் வரும் குற்றவாளிகளை ஹீரோக்களாகப் பார்த்துப் பழகிய ஒரு கூட்டம், நிஜ வாழ்க்கையிலும் குற்றம் செய்தவர்களைக் கொண்டாடும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது ஆபத்தானது எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
சட்டப்படி மீனாட்சி செய்த தவறுக்கு நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும். ஆனால், ஒரு குற்ற வழக்கைக்கூட வேடிக்கையாகப் பார்த்து, அதில் காதல் மற்றும் திருமண கமெண்ட்களைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ள நினைக்கும் இந்தப் போக்கு தமிழ் சமூகத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
