கிரீமிலேயர்.. உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு.. பிரதமருக்கு திமுக எம்பி வில்சன் முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பாரத பிரதமர் நரேந்திர மோடி விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை எம்பியும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வில்சன் விடுத்துள்ள அறிக்கையில்,"22 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) அரசுப் பணிகளில் கிடைக்க வேண்டிய உரிய இடஒதுக்கீட்டு வாய்ப்பைப் பறித்துவந்த அநீதியைச் சரிசெய்யும் வகையில், கடந்த ஆறாம்தேதி அன்று உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

Creamy layer Supreme Court s landmark verdict DMK MP Wilson makes a key request to the PM

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, அந்த வகுப்பைச் சேர்ந்த தகுதியுடைய அனைத்துப் பிரிவினருக்கும் வழங்கப்பட வேண்டும். 1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அலுவலகக் குறிப்பாணை (Office Memorandum) மூலமாகவே 'கிரீமிலேயர்' (Creamy Layer) என்ற கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.


பெற்றோர்களின் வருமானம்

அதன்படி, பெற்றோரின் வருமானம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்த பிற வருமானங்கள் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்தைத் தாண்டினால் (தற்போது இது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது), சம்பந்தப்பட்ட நபர் கிரீமிலேயர் பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்பட்டு, OBC இடஒதுக்கீட்டைப் பெறத் தகுதியற்றவராகிறார்.

1993ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையின்படி கிரீமிலேயர் வருமானத்தைக் கணக்கிடும்போது பெற்றோரின் வருமானத்தையும் விவசாய வருமானத்தையும் சேர்க்கக்கூடாது என்பதுதான். மாறாக, பிற ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே அதனைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் விளக்கக் கடிதம்

ஆனால், 14.10.2004 அன்று மத்திய அரசு வெளியிட்ட தவறான விளக்கக் கடிதத்தின் (Clarification Letter) மூலம், OBC கிரீமிலேயர் வருமான வரம்பைக் கணக்கிடும்போது பெற்றோரின் ஊதியத்தையும் தவறாகச் சேர்த்துக்கொண்டது. இதன் மூலம் 1993ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையில் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டது. மத்திய அரசின் இந்தத் தவறான நடவடிக்கையால், கடந்த 22 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தகுதியுடைய OBC இளைஞர்கள் அரசுப் பணிகளில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்தது

14.10.2004 தேதியிட்ட இந்த விளக்கக் கடிதத்தை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (Central Administrative Tribunal) வழக்குத் தொடரப்பட்டது. அந்த விளக்கக் கடிதத்தைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதனை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 11.03.2026 அன்று உச்சநீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. 14.10.2004 தேதியிட்ட விளக்கக் கடிதமானது, 08.09.1993 தேதியிட்ட அலுவலகக் குறிப்பாணைக்கும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கைக்கும் நேரடியாக முரணாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.

இடைக்கால மனு

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திரா சாவ்னி (Indra Sawhney) வழக்கின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதுடன், இடஒதுக்கீட்டையும் பாதிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

தாமதம் செய்ய முயற்சி

இந்த வழக்கில் சில மனுதாரர்கள் சார்பில் தான் ஆஜராகி மத்திய அரசின் இந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இறுதியாக வழங்கிய தீர்ப்பைத் தாமதப்படுத்தவோ, மறைமுகமாகச் செயலிழக்கச் செய்யவோ மத்திய அரசு முயற்சிப்பதாக வாதிட்டேன்.

ஓபிசி வேலைவாய்ப்பு

மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் சொந்த 1993ஆம் ஆண்டு விதிமுறைகளைக்கூட மதித்து நடக்காமல், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training - DoPT) செயல்படத் தவறியுள்ளது. தகுதியுடைய OBC விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்ய, தேவையான கூடுதல் பணியிடங்களை (Supernumerary Posts) உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதையும் நான் வாதிட்ட போது சுட்டிக்காட்டினேன்.


உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்து முடிவுக்குக் கொண்டுவந்த மாண்புமிகு உச்சநீதிமன்றம், தனது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து எட்டு வாரங்களுக்குள் அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டது.

நீதிபதிகள் கூறியது என்ன

மேலும், 11.03.2026 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, குறிப்பாகப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியைக் கருத்தில் கொண்டு, அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் உரிமைகளைத் தெளிவாகத் தீர்மானித்துவிட்டது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீதிபதிகள் திரு. பி.எஸ். நரசிம்மா மற்றும் திரு. ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள இத்தீர்ப்பு, சமூகநீதியை நிலைநாட்டுவதில் ஒரு மைல்கல். சமத்துவத்தை மீட்டெடுத்து, சமூகநீதியை உறுதிசெய்வதாக அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள வாக்குறுதியை நிலைநாட்டுவதில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமான முன்னெடுப்பு, இனிவரும் காலங்களில் நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான OBC மக்களுக்கு இந்தத் தீர்ப்பு பயனளிக்கும்.

இடஒதுக்கீடு உரிமை

அரசியலமைப்புச் சட்டம் இடஒதுக்கீட்டுக்கான உரிமையை வழங்கியிருந்தாலும், 2004 அக்டோபரில் வெளியிடப்பட்ட தவறான விளக்கக் கடிதம் போன்ற நிர்வாக ரீதியான முறைகேடுகள் மூலம் OBC மக்களின் இடஒதுக்கீட்டு உரிமை திட்டமிட்டு பறிக்கப்பட்டு, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியப் பிரதமர் அவர்களும், மத்திய பணியாளர் நலன் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மேலும் காலம் தாழ்த்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.

பிரதமருக்கு வலியுறுத்தல்

கடந்த 22 ஆண்டுகளாக OBC இளைஞர்கள் இழந்த வேலைவாய்ப்புகளையும், அவர்களுக்குப் பறிக்கப்பட்ட வாய்ப்புகளையும் வெறுமனே கடந்தகால அநீதியாகக் கருதிவிடக் கூடாது. அந்த இழப்புகளைக் கணக்கிட்டு, உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் " இவ்வாறு வில்சன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+