தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி.. குழந்தைகளுக்கு தங்க மோதிரம்! வெளியான ஆர்டர்.. யாருக்கு கிடைக்கும்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அதிக கவனம் பெற்ற திட்டங்களில் ஒன்றான "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற இந்த திட்டம், மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது யார் யாருக்கு அந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக, பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப நலனை மையமாகக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துவது, இலவச சிலிண்டர், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

குறிப்பாக, புதிதாக பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் விதமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த திட்டம் வெறும் தங்க மோதிரம் வழங்கும் திட்டமாக மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களை கௌரவிக்கும் சமூக நலத் திட்டமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, பாதுகாப்பான பிரசவத்தை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்கும் என்ற கேள்வி பலரிடமும் எழுந்து வந்தது. அதற்கும் தற்போது தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றால், அந்த குழந்தை இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதியுடையதாக இருக்கும். தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது என கூறப்படுகிறது.
இதனுடன், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான "பேபி வெல்கம் கிட்" வழங்கும் திட்டமும் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. அந்த கிட்-இல் குழந்தைகளுக்குத் தேவையான உடைகள், ஊட்டச்சத்து பொருட்கள், தரமான சோப்பு, எண்ணெய், பவுடர், கொசுவலை, பொம்மைகள், நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த ஆண்டுதோறும் சுமார் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக கருதப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திட்டம் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டாலும், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் திட்டத்தின் பலன் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதோடு, புதிதாக பிறக்கும் குழந்தைகளை அரசின் சார்பில் வரவேற்கும் வகையில் இந்த திட்டம் அமைய இருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் பேசப்பட்ட திட்டங்களில் ஒன்றான "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" தற்போது நடைமுறைக்கு வருவதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications