கார், பைக்-கிற்கு 'பேன்சி நம்பர்' வாங்க போறீங்களா? பர்ஸ் காலி.. இனி ரூ.8 லட்சம் கட்டணம்!
புது பைக் அல்லது கார் வாங்கத் திட்டமிட்டு, அதற்கு ஒரு கெத்தான பேன்சி நம்பர் வாங்க நினைப்பவர்களுக்குத் தமிழக போக்குவரத்துத் துறை ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புது காருக்கு 'பேன்சி நம்பர்' (Fancy Number) வாங்குவது என்பது தற்போது தனி அடையாளமாக மாறி வருகிறது. துபாயில் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் இருக்கும் கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டிலும் அதிகளவில் பரவி வருகிறது. ஒரு காலத்தில் பேன்சி வாங்க ஒரு சிலர் மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள் ஆனால் இப்போது இது ஒரு சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படும் காரணத்தால் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்னும் சிலரோ ஜோசியம், நியூமராலஜி போன்றவற்றின் மீதுள்ள நம்பிக்கையாலும், தங்களின் பிறந்த நாள் அல்லது திருமண நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையிலும் கூடுதல் பணம் கொடுத்து இந்த சிறப்பு எண்களை வாங்கி வருகிறார்கள். இந்த ஆர்வம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே பரவலாகக் காணப்படுகிறது.
இத்தகைய சூழலில், நீங்கள் வாங்கும் வாகனங்களுக்கான சிறப்பு பதிவெண்ணை முன்கூட்டியே பெறுவதற்கான கட்டணங்களை கணிசமாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிவிப்பு தற்போது தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இடைத்தரகர்களுக்கு செக்
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) குறிப்பிட்ட எண்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, அந்தப் பேன்சி எண்களைப் பெறுவதற்குப் பின்னணியில் சில முறைகேடுகளும் லஞ்சப் புகார்களும் எழுந்து வந்தன. ஒரே எண்ணைப் பல நபர்கள் கேட்கும்போது ஏற்படும் போட்டியைப் பயன்படுத்தி, ஆர்.டி.ஓ அலுவலகங்களில் உள்ள சில அதிகாரிகளும் இடைத்தரகர்களும் பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு எண்களை விற்று வந்ததாகக் கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன.
இத்தகைய முறைகேடுகளையும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளையும் முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேன்சி எண்களைக் கூடுதல் பணம் கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கும் நிலையில், அந்தப் பணம் இடைத்தரகர்களுக்குச் செல்வதைத் தடுத்து, நேரடியாக அரசுக்கு வருவாயாக மாற்றப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டூவீலர் மற்றும் கார்களுக்கான புதிய கட்டணப் பட்டியல்
புதிய திருத்தங்களின்படி, தற்போதைய நடப்பு வரிசையில் இருந்து அடுத்தடுத்த வரிசைகளில் இருக்கும் எண்களைப் பெறுவதற்கான கட்டணங்கள் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, வாகனத்தின் சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த சிறப்புப் பதிவெண் கட்டணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள இருசக்கர வாகனங்களுக்குச் சிறப்புப் பதிவெண் பெறக் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதர நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கும் இந்த புதிய கட்டண உயர்வு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரிஸ் அடிப்படையில் எகிறும் கட்டண விவரங்கள்
தற்போது ஓடிக்கொண்டிருக்கும் வாகனப் பதிவு வரிசையில் (Current Running Series) இருந்து அடுத்த நான்கு வரிசைகளுக்குள் இருக்கும் பேன்சி எண்களைப் பெறுவதற்கு 20,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
அதேபோல, அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு எண்களுக்குத் தற்போதைய வரிசை மற்றும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு 80,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் தாண்டி, எதிர்காலத்தில் வரவிருக்கும் 13 மற்றும் 14-வது அட்வான்ஸ் சீரிஸ் (Advanced Series) வரையிலான கடைசி கட்ட எண்களை முன்கூட்டியே புக் செய்ய வேண்டும் என்றால், அதற்கு அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த அடுக்குமுறை கட்டண அமைப்பானது அனைத்து வகையான வாகனங்களுக்கும், இறக்குமதி வாகனங்களுக்கும் பொதுவான விதியாக மாற்றப்படவுள்ளது.
இந்தத் திடீர் கட்டண உயர்வு அறிவிப்பு புதிய வாகனங்களை வாங்கக் காத்திருக்கும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு ராசியான எண்களை எளிய முறையில் பெற்று வந்த தங்களுக்கு இது கூடுதல் சுமையாக மாறும் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆனால், போக்குவரத்துத் துறையோ இந்த மாற்றத்தை வேறு கோணத்தில் விளக்குகிறது. பேன்சி எண்களுக்காகப் பொதுமக்கள் வெளியில் கொடுக்கும் லஞ்சப் பணம் இனி முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக அரசுப் பொதுக் கணக்கிற்குச் சென்று சேரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதன் மூலம் துறையின் வருவாய் பெருக்கப்பட்டு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்களுக்குப் பிடித்தமான எண்களை வாங்க விரும்புவோர் இந்த புதிய கட்டண முறை அமலுக்கு வரும் முன்பே திட்டமிட்டுக் கொள்வது அவசியமாகிறது.












Click it and Unblock the Notifications