அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு.. உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணை பகுதியில் அமைந்துள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயுக் கசிவு விபத்து, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பலனின்றி பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ள நிலையில், தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர்கள் இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சைகளை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மூச்சுத்திணறிய தொழிலாளர்கள்
வழக்கம்போல் ஷிப்ட்டில் 70-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் இறால் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளிரூட்டும் பிரிவில் (Cold Storage) இருந்த அம்மோனியா வாயு சிலிண்டர் குழாயில் திடீரென பெரும் கசிவு ஏற்பட்டது.
நச்சு வாயு காற்றில் வேகமாகப் பரவியதால், அடுத்த சில நிமிடங்களிலேயே தொழிற்சாலை முழுவதும் புகைமூட்டம் போலக் காட்சியளித்தது. வாயுவைச் சுவாசித்த தொழிலாளர்களுக்குக் கண் எரிச்சல், நெஞ்சு வலி மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆபத்தை உணர்ந்து அலறியடித்தபடி வெளியேற முயன்ற பல தொழிலாளர்கள், வாயிலிலேயே மயங்கி விழுந்தனர்.
பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முகமூடிகளை அணிந்து உள்ளே சென்று தொழிலாளர்களை மீட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் பெரியபாளையம், மஞ்சங்கரணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 70-க்கும் மேற்பட்டோருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடி கைது
விபத்து நடந்தவுடன் தொழிற்சாலையின் உரிமையாளர்கள் தலைமறைவாகினர். இதுகுறித்து பெரியபாளையம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த விபத்திற்குக் காரணமான இறால் பண்ணை உரிமையாளர்களான மோகன் மற்றும் ஜோசப் ஆகிய இருவரையும் போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 நாட்களுக்கு NDRF வசம்: ஆலைக்குத் தடை
வாயுக் கசிவின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையாததால், விபத்து நடந்த தொழிற்சாலை வளாகம் அடுத்த 3 நாட்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மறு உத்தரவு வரும் வரை இந்த ஆலை இயங்குவதற்குத் தமிழக அரசு முழுமையாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசரக்கால வழிகள் இல்லாததே இந்த அநியாய உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முதல்வர் விஜய் உத்தரவு
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் குமார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை விபத்து நிலவரங்கள் குறித்து முதலமைச்சருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கொடூர விபத்து குறித்து முழுமையாகப் புலனாய்வு செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
விபத்து எப்படி நிகழ்ந்தது, அங்கு முறையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்துத் தீவிரமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் அவசர உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications