முதல்வர் விஜய் பிறந்தநாளில் பெண்களுக்கு ‘ஜாக்பாட்’.. நாளை சட்டசபையில் வெளியாகிறது ‘மேஜர்’ அறிவிப்பு?
சென்னை: திரைத்துறையில் ரசிகர்களை ஈர்த்து, இன்று தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் 'தமிழக வெற்றிக் கழக' தலைவர் விஜய்க்கு நாளை (ஜூன் 22) 52-வது பிறந்தநாள். இதுவரை ஒரு நடிகராக, 'தளபதி'யாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜய், இப்போது முதன்முறையாகத் தமிழக முதலமைச்சராகத் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார்.
2024 பிப்ரவரியில் கட்சி தொடங்கி, விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 'விசில்' சின்னத்துடன் களம் கண்டார் விஜய். "உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்திருக்கிறேன், ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்ற அவரது ஒற்றை முழக்கம் மக்கள் மனதைத் தொட்டது. கடந்த மே 10 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்று வெற்றிகரமாக ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த பிறந்தநாள் அவரது அரசியல் பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

சட்டசபையில் புதிய அறிவிப்பு?
தற்போது தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், நாளை சட்டமன்றத்தில் சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என ஒட்டுமொத்த சபையும் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கத் தயாராகி வருகிறது.
ஆனால், ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் அதைவிட பெரிய சுவாரசியம் என்னவென்றால், "தன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் நாளை சட்டசபையில் ஒரு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிடப்போகிறார்" என்ற தகவல் தான்.
பெண்களுக்குக் காத்திருக்கும் அந்த 'சர்ப்ரைஸ்' என்ன?
நடந்து முடிந்த தேர்தலில் தவெக பெண்களை மையமாகக் கொண்டு பல கவர்ச்சிகரமான மற்றும் முக்கியமான வாக்குறுதிகளை அளித்தது. அதில் குறிப்பாக:
மாண்புமிகு மகளிர் திட்டம்: பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை.
அண்ணன் சீர்: ஏழைப் பெண்களுக்குத் திருமணத்தின் போது பட்டுப்புடவையுடன் ஒரு சவரன் தங்கம்.
அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்: தமிழகப் பெண்கள் அனைவருக்கும் கட்டணமில்லாப் பேருந்து சேவை.
குழந்தைகளுக்கான அன்புப் பரிசு: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க மோதிரம்.
சமீபத்தில் தான் தமிழக அரசு தனது நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, மாநிலக் கடனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், தனது முதல் பிறந்தநாளை முன்னிட்டு, மேலே சொன்ன மகளிர் நலத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது மிக முக்கியமான மகளிர் உதவித்தொகை திட்டத்தையோ முதலமைச்சர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு, இப்போதே முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பை வெளியிட்டு ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்
ஒருபுறம் சட்டசபையில் அறிவிப்புகள் தயாராகி வர, மறுபுறம் தவெக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்புப் பூஜைகள், அன்னதானங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க எனப் பிறந்தநாள் கொண்டாட்டங்களை இப்போதே திருவிழா போலத் தொடங்கிவிட்டனர்.
திரைப்படங்களின் 'ஃபர்ஸ்ட் லுக்'கிற்காகக் காத்திருந்த ரசிகர்கள், இப்போது தங்களின் 'முதலமைச்சர்' விஜய்யின் 'ஃபர்ஸ்ட் பர்த்டே' அறிவிப்பிற்காகக் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களுக்கான மேஜர் திட்டம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகலாம் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications