நான் முயற்சி எடுப்பது பயனளிக்காது.. அதிமுக பாஜக கூட்டணி குறித்து கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி
சென்னை: அதிமுக பாஜக இடையிலான கூட்டணிக்கு தான் முயற்சிக்கவில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பாஜக உடன் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், " தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜக கூட்டணியில் இருந்தும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தி ஊடகங்கள் அன்றே கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜக தேசிய கட்சி என்றும், தங்கள் மேலிடம் இந்த விவகாரம் குறித்து உரிய நேரத்தில் பதில் அளிக்கும் என்றார். இதையடுத்து
பொள்ளாச்சியில் தனது 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரையின் போது கட்சித் தொண்டர்களிடம் பேசினார்.
அப்போது அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்ததை மறைமுகமாக குறிப்பிட்டு அண்ணாமலை பேசும் போது, தமிழக பாஜக சவாலான காலத்தை எதிர்கொள்கிறது என்றும் பலரை எதிர்க்க கட்சி தயாராக வேண்டும் என்றும் 'அரசியல் மாற்றத்தை' ஏற்படுத்த அனைத்து தடைகளையும் கடக்க தான் தயார் என்றும் கூறினார்.
கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில், தனி நபர்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், நம்மை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளவும், இறுதியில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை உறுதிசெய்யவும் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
இந்த சூழலில் அண்மையில் பேட்டி அளித்த கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்: எங்களோடு கூட்டணியில் இருந்த பாஜகவின் மாநில தலைமை அதிமுக குறித்தும் எங்கள் இயக்கத் தலைவர்களைப் பற்றியும் விமர்சனம் செய்தது. இதனால் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கூட்டணியை விட்டு விலகினோம்.
ஆனால் ஊடகங்களில் விவாதங்களில் கலந்து கொள்கிற ஊடகவியலாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர், அதிமுக நேரம் வரும் போது மீண்டும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துவிடும் என மக்களை திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தக் காரணத்தை கொண்டும் அதிமுக, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணையாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனி கூட்டணி அமையும். அது மிகவும் வலிமையான கூட்டணியாக அமையும் என்றார்.
இந்த சூழலில் கேபி முனுசாமிக்கு பதில் அளிக்கும் வகையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட, பாஜகமேலிட பொறுப்பாளர் சிடி ரவி, வள்ளுவர் பிறந்த மண்ணில் தாமரை மலர்ந்தே தீரும் என்றார். அதிமுக பாஜக இடையே எந்த விதமான கருத்து பரிமாற்றங்களும் இல்லை.கூட்டணியை விட்டு அதிமுக விலகிய போதும்,பாஜக தலைமை இதுவரை எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அண்ணாமலையும் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த சூழலில் டெல்லி பாஜக மேலிடம் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்துள்ளது. டெல்லி சென்றுள்ள அண்ணாமலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கூட்டணி முறிவு குறித்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக கூட்டணி உடனான முறிவு என்பது தொண்டர்களின் முடிவு. எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். மாநிலத்தின் உரிமையை காக்க அதிமுக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக பாஜக கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இதுபற்றிகூறும் போது, அதிமுக பாஜக இடையிலான கூட்டணிக்கு தான் முயற்சிக்கவில்லை. பாஜக உடன் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்று அதிமுக கூறும் போது, நான் முயற்சி எடுப்பது பயனளிக்காது. தென் மாவட்டங்களில் 14 முதல் 20 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ளது. தென் மாவட்டங்களின் வளர்ச்சியை நாடாளுமன்றத்தில் உறுதிபட எடுத்துரைக்கும் வகையில் கூட்டணி அமையும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications