அசராத அண்ணாமலை.. ரூ.100 கோடி இழப்பீடு தர மாட்டேன்! மன்னிப்பு கேட்க மாட்டேன்! டிஆர் பாலுவுக்கு பதில்
சென்னை: தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் தன்னுடைய சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையிடம் ரூ.100 இழப்பீடு கேட்டு திமுக பொருளாளர் டிஆர் பாலு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இழப்பீடு தர முடியாது என அவர் வழக்கறிஞர் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொத்துப் பட்டியலை வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் அதை வெளியிடுவோம் என்றும் பல மாதங்களாக பேசி வந்த அண்ணாமலை ஒரு பிரசெண்டேசனை வெளியிட்டார்.
அது ஊழல் பட்டியல் இல்லை என்றும் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப் பட்டியலையே வெளியிட்டு உள்ளார் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. அண்ணாமலை வெளியிட்ட இந்த பட்டியல் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பல்வேறு தவறான தகவல் இருப்பதாக கூறி விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் மீது அவதூறான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. "தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் நீங்களும் முத்திரை பதிக்க முடியாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயரைக் கலங்கப்படுத்தவும் அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள்.
DMK FILES என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது பல தவறான, அவதூறான, ஆதாரமற்ற, கற்பனையான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளீர்கள்." என்று தெரிவித்து உள்ளார். "திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் கூறிக்கொள்வது" என்று குறிப்பிட்டு உள்ள ஆர்.எஸ்.பாரதி, "உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும்.
இழப்பீட்டுத் தொகையாக ரூ. 500,00,00,000 (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், டிஆர் பாலு ஆகியோரும் அண்ணாமலையிடம் இழப்பீடு கேட்டு அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவின் வக்கீல் நோட்டீசுக்கு பதில் அனுப்பிய அண்ணாமலை, மன்னிக்கு கேட்கவும், இழப்பீடு தரவும் முடியாது என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று டிஆர் பாலுவுக்கு அண்ணாமலை வழக்கறிஞர் மூலம் பதில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், அண்ணாமலை தன்னுடைய கருத்தில் உறுதியாக உள்ளதாகவும், அவர் மன்னிப்பு கேட்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் டிஆர் பாலு கேட்ட ரூ.100 கோடி இழப்பீட்டையும் தரப்போவதில்லை என அண்ணாமலை சார்பாக அவரது வழக்கறிஞர் பதில் அனுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications