ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் தான் முதல்வர் ஆக வேண்டியது! ஈரோட்டில் எடப்பாடியை விளாசிய செங்கோட்டையன்
சென்னை: ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் தான் முதல்வர் ஆக வேண்டியது. ராத்திரி வரை நான் தான்.. ஆனால் காலையில் கதை மாறிப்போச்சு.. இல்லையென்றால் நான் முதல்வர் ஆகி இருப்பேன்.. மலைப்பாம்பு மாதிரி எடப்பாடி காலில் ஊர்ந்து வந்து பதவியை வாங்கினார். பின்னர் சசிகலாவையும் துரத்திவிட்டுவிட்டார் என்று செங்கோட்டையன் பேசினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை விஜய் வழங்கினார். தற்போது செங்கோட்டையனுக்கு கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார்.

செங்கோட்டையன் பிரசாரம்
தேர்தல் தேதி நெருங்கியுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூடுபறக்க பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தவெக நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் செங்கோட்டையனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட செங்கோட்டையன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் தான் முதல்வர் ஆகவேண்டியது. ஆனால் காலையிலேயே கதை மாறிப்போச்சு" என்று பேசினார்.
நான் தான் முதல்வர் ஆக இருந்தேன்
செங்கோட்டையன் பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓட்டு கேட்டு வந்துருக்கிறார். திமுகவை வீழ்த்துவேன் என்று சொல்லி வருகிறார். ஆனால் பத்து தோல்வி பழனிசாமி மீண்டும் தோற்கத் தான் போகிறார். 50 லட்சம் கோடி சம்பாதித்தும் உங்களுக்கு ஆசை தீரவில்லை. புரட்சித் தலைவி அம்மா மறைவிற்கு பிறகு நான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும். ஏமாந்துவிட்டேன்.. ராத்திரி வரை நான் தான்.. ஆனால் காலையில் எல்லாம் மாறிப்போச்சு..
அந்த ஆளு கையில் பெட்டி இருந்தது. காலையில் எங்கிட்ட கேட்டாங்க சசிகலா.. அப்போது நான் யார் இருந்தால் என்ன.. கட்சி உடையாமல் இருந்தால் போதும் என்று சொன்னேன்.. ராத்திரி வரை என்னிடம் சசிகலா நான் தான் முதல்வர் என்று சொல்லியிருந்தார். ஆனால் திடீரென மலைப்பாம்பு போல ஊர்ந்து வந்தார் எடப்பாடி.. என் காலுக்கு அடியில் மலைப்பாம்பு போல வந்தார். நானும் மலைப்பாம்பு தான் வந்துவிட்டதோ என நினைத்து சேரை தூக்கினேன்..
எல்லாத்துக்கும் துரோகம்
காலைப் பிடித்து கெஞ்சிவிட்டு முதல்வர் பதவிக்கு வந்துவிட்டு பிறகு சசிகலாவையை தூக்கி எறிந்தார். டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏக்களை வைத்து எடப்பாடிக்கு சப்போர்ட் பண்ணினார். ஆனால் கடைசியில் அவரையும் நீக்கிவிட்டார். 11 பேர் ஓட்டு போட்ட ஓ பன்னீர் செல்வத்தையும் கழட்டிவிட்டுவிட்டார். இவரை காப்பாத்தின பாஜகவையும் ஏமாத்திவிட்டார். போன லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்காமல் கழட்டி விட்டார்ல..
பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் தருவேன்னு சொல்லி கடைசியில் அவரையும் ஏமாத்திவிட்டார். அண்ணாமலை நீக்கினால் தான் பாஜகவுடன் கூட்டணி வைப்பேன் என்று யாராவது சொல்லுவாங்களாப்பா. கொள்ளை அடிச்ச பணம் பத்தாமல் மேலும் கொள்ளையடிக்க தான் முயற்சி செய்கிறார்கள்.
7 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவை
மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன் என்று சொன்ன ஒரே தலைவர் நம் தளபதி தான்.. அத்தனை பேருக்கும் இடம் பார்த்து வீடு கட்டி தரப்படும். அத்தனை பேருக்கும் இருசக்கர வாகனம் தரப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 மற்றும் வருஷத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும். மணப்பெண்களுக்கு ஒரு பவுன் தங்கமும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவையும் வழங்கப்படும்.
நேர்மையான ஆட்சியை தருவோம்
அரசு பேருந்தில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்துகொள்ளலாம். இது எல்லாம் எப்படி அய்யா நிறைவேற்ற முடியும் என்று கேட்டார்கள். அதற்கு தளபதி சொன்னார், ஆண்டுக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி பட்ஜெட், 1 லட்சம் கோடி ஊழல்.. ஐந்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடியை வைத்துக்கொண்டு நேர்மையான ஆட்சியை நடத்தி காண்பிப்பேன்.. என்று சொன்ன தலைவர் எங்கள் தளபதி.. இப்போ கூட ஓட்டுக்கு காசு கொண்டு வருவாங்க.. எல்லாத்தையும் வாங்கிக்கோங்க.. 8 ஆயிரம் வரை தருவாங்க.. எல்லாம் கொள்ளை அடிச்ச காசு.. வாங்கிக்கோங்க.. அவங்க வெளியே போனது விசில் அடித்துவிட்டுவிடுங்கள்.. என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications