தவெகவின் வெற்றி விழாவில் நான் தமிழில் தான் பேசுவேன் - பிரசாந்த் கிஷோர்
சென்னை: தவெக ஒரு கட்சி அல்ல. இது ஒரு புதிய இயக்கம். விஜய் ஒரு தலைவர் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை. தவெகவின் வெற்றி விழாவில் நான் தமிழில் தான் பேசுவேன் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கெட் அவுட் என்ற பதாகையில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பதாகையில் கையெழுத்திட்டனர்.
பிரசாந்த் கிஷோருக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பெரியார் சிலையை தவெக தலைவர் விஜய் பரிசளித்தார். இந்நிகழ்ச்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக வெற்றிக் கழகம், தவெகவினர் தமிழ்நாட்டுக்கு நன்றி. உண்மையான கதாநாயகன் விஜய் இன்னும் சிறிது நேரத்தில் பேசவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான்.
தவெக வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கு நான் காரணமாக இருக்க முடியாது. நீங்கள் செய்யப்போகும் வேலைக்கான வெற்றி அது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் முடிவுகளில் எனது பணி எதுவுமில்லை. தவெக அல்லது விஜய்க்கு வியூகம் அமைக்க இங்கு வரவில்லை. தவெகவும், பிகேவும் இணைந்து செயல்படுவது குறித்து பலரும் பேசுகிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வியூகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். நான் தேர்தல் வியூக வகுப்பாளராக இங்கு வரவில்லை. என்னுடைய வியூகமும் அவருக்குத் தேவை இல்லை.
என்னைப் பொருத்தவரை விஜய் ஒரு தலைவர் மட்டுமல்ல தமிழ்நாட்டின் நம்பிக்கை. தவெக ஒரு கட்சி அல்ல. அது ஒரு புதிய அரசியல் இயக்கம். 35 ஆண்டுகால அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்.
மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவார் விஜய். தமிழ்நாடு மக்கள் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். புதிய தலைமையை பார்க்க விரும்பும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக தவெக உள்ளது.
2026 இல் தவெகவின் தேர்தல் வெற்றி விழாவில் நான் தமிழில் தான் பேசுவேன். தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழலைப் போல நான் வேறு எங்குமே பார்த்ததில்லை. அதனை சரிசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் சிஎஸ்கே தோனி மிகவும் பிரபலமானவர். அடுத்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுவிட்டால் தோனியைவிட நான் பிரபலமாவேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications