இந்த வேகத்தில் போனால் இந்தியாவில் ஜுன் இறுதியில் 22 லட்சம் பேரை கொரோனா பாதிக்கும்! புள்ளி விவரம்
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் இப்போது உள்ள 10 நாட்களுக்கு ஒரு முறை இருமடங்கு என்ற சூழ்நிலையே தொடர்ந்தால் அடுத்த ஒரு மாதம் மற்றும் ஜுன் மாதத்தில் கொரோனா பாதிப்பு, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மோசமாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சுமார் 28 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி உள்ளது. 872 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு 10 நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்கு ஆகி வருகிறது. அந்த வகையில் அடுத்த ஒரு மாதத்தில் இதே வேகத்தில் கொரோனா பரவினால் அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் 2லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இதேபோல் ஜுன் இறுதிக்குள் 22லட்சம் பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜுன் இறுதியில் 72000 பேர்
இதேபோல் 10 நாட்களுக்கு இருமடங்கு என்ற விகிதத்தில் உயிரிழப்புகள் இருந்தால் இந்த மாத இறுதியில் 6700 பேர் கொரோனாவால் இந்தியாவில் இறக்கும் அபாயம் உள்ளது. அது போல் ஜுன் இறுதிக்குள் 72000 பேர் இறக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் ஒரு மாத இறுதியில் தினமும் 440 பேர் இறப்பார்கள் என்றும், ஜுன் இறுதியில் 4700 பேர் தினமும் இறப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.6லட்சம் நோயாளிகள்
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று இரு மடங்கு ஆகும் வேகம் 8 நாட்களுக்கு ஒருமுறை என்று மாறினால். இந்தியாவில் அடுத்த ஒரு மாதம் முடிவில் கொரோனாவால் 3.6லட்சம் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல் ஜுன் இறுதிக்குள் 74லட்சம் பேர் கொரோனா பாதிக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

20000 பேர் இறப்பார்கள்
8 நாளைக்கு ஒருமுறை உயிரிழப்பு இருமடங்காக அதிகரித்தால் அடுத்த ஒருமாத இறுதியில் 12000 பேர் இறந்திருப்பார்கள் என்றும், இதுவே ஜுன் மாத இறுதியில் ஒட்டுமொத்தமாக 2.44லட்சம் இறக்கும் அபாயம் உள்ளது என்றும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அத்துடன் தினமும் அடுத்த ஒரு மாத இறுதியில் 1000 பேர் தினமும் இறப்பார்கள் என்றும், ஜுன் இறுதியில் தினமும் 20000 பேர் இறப்பார்கள் என்றும் எச்சரிக்கிறது ஆய்வு முடிவுகள்.

மருத்துவ உதவிகள்
இது ஒருபுறம் எனில் கொரோனா நோயாளிகள் மேற்கண்ட விகிதத்தில் பாதி அளவு ஏற்பட்டால் கூட சமாளிப்பது மிக கடினம் ஆகும். அத்தனை பேருக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பது, தனிமைப்படுத்துவது, சிகிச்சை அளிப்பது என்பது எல்லாம் சுத்தமாக இயலாத காரியம். இதன் காரணமாக அரசு லட்சம் கோடிகள் வருவாயை புறக்கணித்துவிட்டு நாட்டு மக்களை வீட்டுக்குள் இருக்குமாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கிறது. அதை மக்கள் அலட்சியம் செய்தால் நிச்சயம் மேற்கண்ட விளைவுகள் ஏற்பட அதிக அபாயம் உள்ளது.

கொரோனா பாதிப்பு
உலகில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 7 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 3.1 சதவீதமாக உள்ளது. இதேபோல் குணமாகும் விகிதமும் 22 சதவீதம் அளவுக்கு உள்ளது. ஆனால் தமிழகத்தில் குணமாகும் விகிதம் 52 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நாட்டிலேயே கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.












Click it and Unblock the Notifications