பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள்.. ஸ்டாலின் பதவி விலகனும்.. அன்புமணி ராமதாஸ்
சென்னை: சிவகங்கை திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியில் சாத்தான்குளம் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது எனவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

விசாரணைக் கைதி மர்ம மரணம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தற்காலிக பணியாளராக அஜித் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். 28 வயதான அஜித் குமார் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த கோவிலுக்கு வந்த மருத்துவர் ஒருவரது காரை பார்க்கிங்கில் விடும் போது 10 சவரன் தங்க நகை காணாமல் போனதாக புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த போலீசார் மருத்துவரின் காரை பார்க்கிங் செய்ய உதவிய காவலாளி அஜித்குமாரை போலீசார் அழைத்துச் சென்று விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் உயிரிழந்துள்ளார். தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைகளை மதிக்காமல்
பாமக அன்புமணி ராமதாசும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகிழுந்தில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார்.
சாத்தான்குளம் போலவே நடந்திருக்கிறது
அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.
4 ஆண்டில் மட்டும் 28 பேர்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட போது, ''பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்'' என்று வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications