உதயநிதி தலையை சீவினால்.. ரூ.10 கோடி இல்ல.. அதுக்கு மேலயும் கொடுப்போம்! அயோத்தி சாமியார் ஆவேசம்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை சேர்ந்த சாமியார் ரூ.10 கோடி அறிவித்திருந்த நிலையில் அந்த தொகையை மேலும் அதிகரிக்க தயார் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. கண்டனங்களுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம்
இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கறாராக கூறியிருந்தார். இருப்பினும் பாஜக, அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில் உதயநிதியின் தலைக்கு உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா ரூ.10 கோடியை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய இந்த சாமியார், "சனாதனத்தை இழிவுபடுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாது, நாட்டில் உள்ள 100 மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன். உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார்" என்று கூறியுள்ளார். இது தவிர டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த சாமியாரின் எச்சரிக்கைக்கு பதிலளித்திருந்த உதயநிதி ஸ்டாலின், "எனது தலையை சீவ ரூ.10 கோடி எதற்கு? 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications