தமிழகத்தில் இன்று முதல் 3 நாள் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 29 வரை 3 நாட்கள் வரை திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகே உள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்குகிறது. கோடைக்காலத்துக்கு முன்பே வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாலையில் தமிழகத்தின் சில இடங்களில் லேசாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்றும், இன்றும் மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

லேசானது முதல் மிதமான மழை
மார்ச் மாதமே இந்நிலை என்றால் ஏப்ரல் இறுதி மே மாதங்களில் வெயில் உச்சம் தொடும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தான் இன்று முதல் மார்ச் 29 வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.

மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில்...
இதுதொடர்பாக அந்த மையம் கூறுகையில், ‛‛வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 29ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், அதனருகே உள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்'' என கூறியுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மழை
மேலும், மார்ச் 29ம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தேக்கடி மற்றும் ராசிபுரத்தில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழையில்லை
இதுதவிர சென்னையிலும் மதிய வேளையில் வெயில் கொளுத்து எடுக்கிறது. இருப்பினும் சென்னையில் இருநாட்களுக்கு மழை இல்லை எனவும், சென்னை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications