ராணுவத்தில் டிஜிஎம்ஓ பதவி என்றால் என்ன? அந்த பொறுப்புக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கு? விவரம்
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான டிஜிஎம்.ஓக்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ராணுவத்தில் டிஜிஎம்ஓ பதவி என்றால் என்ன? அந்த பொறுப்புக்கு உள்ள அதிகாரங்கள் என்ன? என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நீடித்து வந்த போர் பதற்றம் சனிக்கிழமை மாலையுடன் தணிந்தது. இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிஜி.எம்.ஓ எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஜெனரல் இயக்குநர் மட்டத்திலான அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

டிஜிஎம்ஓ என்றால் என்ன?
பாகிஸ்தான் டிஜிஎம்ஓ, இந்திய டிஜிஎம்ஓவை சனிக்கிழமை 3.35 மணியளவில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் மாலை 5 மணியளவில் போர் நிறுத்தம் என அறிவிப்பு வந்தது. ஆனாலும் சில மணி நேரங்களில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது. பின்னர் இரவு மீண்டும் தாக்குதல் முயற்சியை நிறுத்திக்கொண்டது.
பதற்றத்தை தணிக்க இருநாட்டு டிஜிஎம்.ஓக்களும் பேசுவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று 12 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டிஜிஎம்.எஒ எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் பொறுப்பு என்பது ராணுவத்தில் உயர் ரேங்கிங் கொண்ட ஒரு பொறுப்பு ஆகும். ராணுவ திட்டமிடல் மற்றும் எல்லை செயல்பாடுகளுக்கான பொறுப்பு இவரிடமே உள்ளது.
டிஜிஎம்ஓ பணிகள் என்ன?
இந்தப் பதவி பொதுவாக ஒரு லெப்டினன்ட் ஜெனரலால் வகிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் டிஜிஎம்.ஓவாக இருப்பது ராஜீவ் கய் ஆகும். பாகிஸ்தானின் டிஜிஎம்.ஓவாக மேஜர் ஜெனரல் காஷிப் அப்துல்லா உள்ளார். இருநாடுகளுக்கும் இடையே பதற்றம், மோதல் ஏற்படும் போது நேரடியாக அதை தணிக்க இந்த அதிகாரிகளே நேரடி தொடர்பில் இருப்பார்கள்.
போர் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் மேற்பார்வையிடுவதும் டிஜிஎம் ஓவின் பொறுப்பு ஆகும். ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக இருப்பதை உறுதி செய்வது இவரது பணிகளில் ஒன்று. ராணுவத்தின் பிற பிரிவு படைகளையும் ஒருங்கிணைத்து அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் சுமூகமான செயல்பாடு நடைபெறுவதை உறுதி செய்வது இவரது பொறுப்புகளில் ஒன்று.
எல்லையில் பதற்றம் ஏற்பட்டால்..
இவரது மற்றொரு முக்கியமான பணிகளில் ஒன்று என்னவென்றால், பாகிஸ்தானின் டிஜிஎம்.ஓவுடன் தனி ஹாட்லைனில் வாரம் தோறும் தொடர்பு கொண்டு பேசுவது, எல்லையில் பதற்றம் உள்ளிட்டவற்றை தணிப்பது ஆகும். ராணுவ தளபதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு வழக்கமான செயல்பாடுகள் பற்றி தகவல்களை அளிக்க வேண்டும்.
எல்லையில் பதற்றம் ஏற்பட்டால் பெரும்பாலும் டிஜிஎம்.ஓக்களைத்தான் தொடர்பு கொள்வார்கள். இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இருநாட்டு அதிகாரிகளுக்கும் ஹாட்லைன் உள்ளது.












Click it and Unblock the Notifications