இன்று தேர்தல் நடந்தால் பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும்.. India Today கணிப்பில் தகவல்!
சென்னை: இன்றைய தேதியில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் மக்களின் வாக்குகள் எப்படி இருக்கும் என 'இந்தியா டுடே' நாடு முழுவதும் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜகவுக்கு இப்போதைய நிலையில் கூடுதல் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கிறது இந்தக் கருத்துக்கணிப்பு. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலை விட இன்றைக்கு அதிக இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமாக 343 இடங்களை வெல்லும் என்றும், பாஜக 282 சீட்களுடன் தனிப் பெரும்பான்மை பெறும் என்றும் இந்தியா டுடே-சி-வோட்டர் நடத்திய 'Mood of the nation' கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் மனநிலையை அறிய இந்தியா டுடே-சிவோட்டர் இணைந்து ஜனவரி 2 முதல் பிப்ரவரி 9, 2025 வரை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் மூட் ஆஃப் தி நேஷன் (MOTN) என்ற பெயரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில்,1,25,123 நபர்களைச் சந்தித்து அவர்களின் மனநிலை ஆய்வு செய்யப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பில் தான், பாஜகவுக்கு நாட்டு மக்கள் மத்தியில் கடந்த ஆண்டை விட ஆதரவு அலை பெருகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கடந்த லோக்சபா தேர்தலில் தனி மெஜாரிட்டி பிடிக்க முடியவில்லை. ஆனால், இன்றைக்கு தேர்தல் நடந்தால் பாஜக மெஜாரிட்டி ஆட்சி அமைக்கும் என்கிறது, மூட் ஆஃப் தி நேஷன் போல்.
2024 மக்களவைத் தேர்தலில் 232 இடங்களில் வென்ற காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, இன்று தேர்தல் நடைபெற்றால் 188 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களை வென்றது. 44% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது 3 சதவீதம் அதிகரித்து 47% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை, கருத்துக் கணிப்பு வாக்குப் பங்கில் 1% மட்டுமே அதிகரித்துல்ள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த கூட்டணி மோதல்களுக்கு மத்தியில் இந்தியா கூட்டணி செல்வாக்கும் சரிந்துள்ளதாகய்த் தெரிகிறது.
இந்த கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு இன்று தேர்தல் நடந்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்றும், இன்று தேர்தல் நடத்தப்பட்டால் அக்கட்சி தனித்து 281 இடங்களை வெல்லும் என்றும் கணித்துள்ளது. காங்கிரஸ் கடந்த தேர்தலில் வென்ற 99 இடங்களிலிருந்து 78 இடங்களாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில், பாஜகவின் வாக்கு சதவீதம் 3 சதவீதம் அதிகரித்து 41% ஆக உயரும் என்றும், காங்கிரஸ் தனது வாக்கு சதவீதத்தை 20% ஆக இழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
'400 பார்' என்ற முழக்கத்தை முன்வைத்த பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது. பாஜக தனது கூட்டணிக் கட்சிகளான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை நம்பி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டியிருந்தது.
எனினும், ஆறு மாதங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சியைப் பிடித்தது மற்றும் டெல்லியில் அண்மையில் கிடைத்த தேர்தல் வெற்றிகளுடன் பாஜக தனது நிலையை முன்னேற்றி உள்ளது.












Click it and Unblock the Notifications