ரிசர்வேஷனில் ஐஆர்சிடி ரயில்வே பிஸி.. தீபாவளியன்று ரயில் முன்பதிவு மையங்கள் திறந்திருக்கும் டைமிங்?
சென்னை: தீபாவளியை ஒட்டி இயக்கப்பட்டு வரும் சிறப்பு பேருந்துகளில் கடந்த 16ம் தேதியிலிருந்து நேற்று 17 நள்ளிரவு வரை 3.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இவர்களை தவிர, 1.40 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,975 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தீபாவளி தினத்தன்று, ரயில்வே முன்பதிவு மையம் செயல்படும் நேரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கி படிப்பவர்களும், அலுவலகங்களில் பணி புரிபவர்களும், பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்கிறார்கள்..

தொடர் விடுமுறை
இன்று 18ம் தேதி சனிக்கிழமை, நாளை ஞாயிறு என்பதால், தொடர் விடுமுறையை சொந்த ஊர்களில் அனுபவிக்க, முன்கூட்டியே ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும், நெரிசலை தவிர்க்கவும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.. மேலும், முன்கூட்டியே டிக்கெட்டும் ரிசர்வ் செய்யப்பட்டன.
பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் அதிகப்படியான நெரிசலைக் குறைக்கும் வகையில், தென் ரயில்வே முக்கிய நகரங்களை இணைக்கும் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்து, சென்னை, கோயம்புத்தூர், போத்தனூர், குமரி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இந்தச் சிறப்புச் சேவைகள் இயக்கப்படுகின்றன.
முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்
அதேபோல 4 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்டோபர்.17, 20ல் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். அக்டோபர்.18, 21ம் தேதி மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.
ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது..
முடங்கிய ஐஆர்சிடிசி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது... ரயில் டிக்கெட்டுகளை தட்கல் முறையில் முன்பதிவு செய்ய, ஒரே சமயத்தில் ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தியதால், வெப்சைட்டே முடங்கிவிட்டது. இதனால், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் நேற்றைய தினம் ஏமாற்றம் அடைந்தனர்.
அடுத்த ஒரு மணிநேரத்திற்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவோ, ரத்து செய்யவோ முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்ததால், பயணிகள் மேலும் அதிருப்திக்கு ஆளானார்கள்.
ரயில்வே கணினி முன்பதிவு மையம்
இந்நிலையில், நாளை மறுநாள் அதாவது தீபாவளி தினத்தன்று ரயில்வே கணினி முன்பதிவு மையம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "விடுமுறை நாளான தீபாவளியன்று (அக்.20) பயணிகள் வசதிக்காக, தெற்கு ரயில்வே சென்னை கோடட் ரயில் நிலையங்களில் கணினி வழி பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் 6 மணி நேரம் செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் 20ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முன்பதிவு மையங்கள் செயல்படும்.. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications