விஜய்யை விட அதிமுக பலமான கட்சி..? எடப்பாடி இல்லாமல் திமுகவை வீழ்த்த முடியாது! பாண்டே கணிப்பு
சென்னை: திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக விஜய் சவால் விட்டுப் பேசியுள்ள நிலையில், அதிமுகவின் உதவி இல்லாமல் 2026இல் வேறு எந்தக் கட்சியாலும் திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான நடிகர் விஜய், "என் கேரியரின் உச்சத்தை, சம்பளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு உங்களை நம்பி வந்திருக்கிறேன்" என்று பேசி இருந்தார்.

மேலும் அவர், "கரப்ஷன் என்பது ஒரு வைரஸ் மாதிரி உள்ளது. . இந்த ஊழல்வாதிகள் எங்கே இருப்பார்கள்? எப்படி இருப்பார்கள் என்பது கண்ணுக்குத் தெரியாது என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். 100% ஊழலை ஒழிக்க முடியுமா? எனத் தெரியவில்லை, ஆனாலும் அதை ஒழிக்க வேண்டும். நம்மை நம்பி யார் கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக் கொள்வோம். வருபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு" என்று பேசி இருந்தார்.
விஜய்யை நம்பி வரும் 2026 தேர்தலில் பெரிய கட்சிகள் கூட்டணிக்குப் போவார்களா? ஏற்கெனவே சீமான் கூட்டணி இல்லை என்று மறுத்துவிட்டார். விஜய்யிடம் புதியதாக எந்தக் கொள்கையும் இல்லை. திமுக நாங்கள் உருவாக்கிய கூட்டணி. எனவே அதைவிட்டுப் போகவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை என்று திருமாவளவன் மறுத்துவிட்டார். வருங்கால களம் எப்படி இருக்கும்?
அது பற்றி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, "இன்றைக்குக் கட்சியின் கொள்கையைப் பார்த்து யாரும் வாக்களிப்பது இல்லை. அப்படிப் பார்த்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நல்ல கொள்கை இருக்கிறது. நானே சொல்கிறேன். ஆனால், அதற்கு யார் வாக்களிக்கிறார்கள்? அவர்கள் என்றாவது ஆட்சிக்கு வந்திருக்கிறார்களா? எனவே கொள்கை முக்கியமல்ல. முகம்தான் முக்கியம். பலர் எல்லா கொள்கைகளையும் உள்ளே போட்டு கிரைண்டரில் போட்டு அரைத்துவிட்டார்.
யாரும் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. இங்கே கொள்கை என்பது இரண்டாம் பட்சம். யார் அதைச் சொல்கிறார் என்பதுதான் முக்கியம். எனவே விஜய் இங்கே சொல்கிறார் என்பதையே மக்கள் முதலில் கவனிப்பார்கள். விஜய்க்கு முதல் எதிரி திமுகதான். அவர் பிரிவினை வாதம், பிளவு வாதம், இனவாதம் எல்லாம் சொல்லி மோடி மஸ்தான் வேலை காட்டி எங்களை ஏமாற்றப் பார்க்காதீர்கள் என்கிறார். அந்த வாக்கியம் மோடி குறித்து அல்ல. திமுக குறி வைத்துச் சொன்னது.
இப்போதைக்கு விஜய் உறுதியாக திமுகவை எதிர்க்கிறார் என்பது தெளிவாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டணி வைக்கவே முடியாது. நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டார் என்பதை விஜய் கொடி அறிவித்த நாளிலிருந்து சுட்டிக்காட்டி வருகிறேன்.அதை இப்போது சீமானே உறுதி செய்துவிட்டார். அதிமுகவுடன் விஜய் கூட்டு வைக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை வீழ்த்திய திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. பாஜகவும் திமுகவுமே கூட்டணியிலிருந்துள்ளன. அரசியலில் எதுவும் நடக்கலாம்.

ஆக, வரும் 2026 தேர்தலைப் பொறுத்தவரை அதிமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது. இன்றைக்கு பாஜக கூட்டணிக் கட்சிகள் உடையாமல் அப்படியே 2026 தேர்தலைச் சந்தித்தால், விஜய்யை விட இரண்டு மடங்கு கூடுதலான இடங்களில் வெற்றி பெறும். அதிமுக 20% வாக்குகளை இன்றும் வைத்துள்ளது. அந்தக் கட்சியைப் பொறுத்தவரை அது ஒரு வீழ்ச்சி. ஆனால், விஜய் உட்படப் பல கட்சிகளின் இலக்கே அந்த 20%தான். ஆக, அதிமுக பலமாகத்தான் இருக்கிறது. குறைத்து எடைபோட முடியாது.
இதே கூட்டணி திமுகவில் அப்படியே தொடர்ந்தால் 2026இல் மீண்டும் அந்தக் கட்சிதான் ஆட்சிக்கு வரும். 2026 திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என யார் திட்டமிட்டாலும் அது அதிமுக ஆதரவு இல்லாமல் நிறைவேறாது. எடப்பாடி அதைப் புரிந்து கொள்ளவில்லை. அண்ணாமலை அதைப் புரிந்து கொண்டுள்ளார். எனவே எடப்பாடி மனம் மாறி கூட்டணியை மறு சீரமைக்க வேண்டும்.
விஜய் 2026இல் பலமான சக்தியாக இருக்க வேண்டும் என நினைத்து கூட்டணிக்கு அழைக்கிறார். ஒன்று ஆளும் கட்சியாக இருக்கவேண்டும். இல்லை எனில் எதிர்க்கட்சி. இரண்டுதான் இலக்கு. அதைப் பெறவில்லை என்றும் 2026க்குப் பின் அவருக்கும் கட்சிக்கும் சிக்கல்தான். ஒரு மாநாடு முடிந்த உடனேயே விஜய் முதல்வராகிவிடுவார் எனச் சொல்ல முடியாது. அவரை நம்பி கூட்டணிக் கட்சிகள் போவார்களா என்றால், அவர் இனி வரும் காலங்களில் எப்படிச் செயல்படுகிறாரோ, அதைப்பொறுத்துத்தான் இருக்கிறது.
அதற்குள்ளாகவே ஆளுநர் வேண்டாம் என்று விஜய் சொல்வது எல்லாம் நடக்காத காரியம். ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் எனில் விஜய் பிரதமராக வேண்டும். அப்போதுதான் தூக்க முடியும். விஜய் கட் அவுட் வைத்துப் போற்றும் அம்பேத்கர்தான் ஆளுநர் பதவியைக் கொண்டுவந்தவர். அவர்தான் குடியரசுத் தலைவர் பதவியைக் கொண்டுவந்தவர். அதைப் புரியாமல் விஜய் பேசி இருக்கிறார்.
விஜய் மாநாட்டுக்கு 3 லட்சம் பேர் வந்திருக்கலாம் என்பது கணிப்பு. உளவுத்துறை 2.5 லட்சம் எனச் சொல்லி இருக்கிறது. குறைந்தது 6% வாக்குகள் அவருக்குக் கிடைக்கலாம். அதை மனதில் வைத்துத்தான் அவர் எல்லா சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும் கட் அவுட் வைத்திருக்கிறார். அது ஒரு அரசியல் கணக்கு. அதனால் வாக்கு விழாது. அது ஒரு அடையாளம் அவ்வளவுதான். அந்தத் தலைவர்கள் சார்ந்த சமூகம் சந்தோசப்படும். அதில் பிராமணர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. அது வழக்கமாக நடப்பதுதான்" என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications