மது ஒழிப்பு என்பது மாயை? டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இல்லை? ஜெயரஞ்சன் சவுக்கடி
சென்னை: குஜராத்தில் மது ஒழிப்பு என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தோல்வியடைந்துவிட்ட கொள்கை என்று தமிழக அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக பாமகவின் அடையாளமாக இருந்து மது ஒழிப்பு பிரச்சாரம் என்ற ஒரு புதிய ஆயுதத்தை விசிக கையில் எடுத்துள்ளது. கள்ளச்சாராய மரணங்களை அடுத்து இதை மிகப்பெரிய ஒரு அழிவு சக்தியாக விசிக கொள்கை அளவில் முடிவை எடுத்ததால், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி 'மது ஒழிப்பு' மாநாட்டை நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளது.

மாநாட்டின் அறிவிப்பு வெளியானபோதே அதில் பல குளறுபடிகள் இருந்தன. பல ஆண்டுகளாக மது ஒழிப்பை முன்வைத்துப் போராடிவரும் பாமகவுக்கு அழைப்பு இல்லை. அது ஒரு சாதிய கட்சி என விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியதால் சர்ச்சையானது. பாஜகவையும் மதவாத சக்தி எனக் கூறி மாநாட்டுக்கு அழைக்கப்போவதில்லை என்றார். மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவை இணைத்துக் கொள்ளாமல் மது ஒழிப்பு எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் மது ஒழிப்பு பற்றிப் பேசிவந்த திமுக ஆளும் கட்சியாக மாறிய பிறகு மதுக்கடைகளை மூட வேண்டும் எனக் கொள்கையில் உறுதித்தன்மையை இழந்துவிட்டது.
இந்நிலையில் மது ஒழிப்பு என்பதை பலரும் மேலோட்டமாக அணுகிவருவதாக தமிழக அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் கூறி இருக்கிறார். மேலும் மது ஒழிப்பு என்பது உலகில் எங்கேயும் வெற்றி பெறாத கொள்கை என்றும் கூறியிருக்கிறார். இது பற்றி பேசியுள்ள ஜெயரஞ்சன், "முன்பு அரசின் கொள்கை என்னவாக இருந்தது? நாட்டின் உட்கட்டமைப்பை உருவாக்கினால் பெரிய நிறுவனங்கள் வந்து தொழிற்சாலைகள் தொடங்கும். அதன் மூலம் மக்களுக்கு வேலை கிடைக்கும். அதைக்கொண்டு குடும்ப முன்னேறும் என்று இருந்தது. இந்த முறை சரியாக இல்லை.
வெறும் கட்டமைப்பில் மட்டும் அரசு கவனம் செலுத்தினால், பஞ்சத்தில் உள்ளவன் எப்படி முன்னேறுவான்? நாட்டில் பசி, பட்டினி உள்ளபோது அவன் தொழிற்சாலை வரும்வரை பிழைக்க என்ன செய்வான்? அதற்காகத்தான் கடந்த 10 ஆண்டுகள் முன்னால் பல விசயங்கள் உரிமையாக வழங்கியது அரசு. அதாவது உணவு என்பது உரிமை. கல்வி என்பது உரிமை. இதனால் அனைவருக்கும் உணவு. அனைவருக்கும் கல்வி என்பது உறுதியானது.
அதைப்போலத்தான் இப்போது அரசு மகளிருக்கு 1000 ரூபாய் தருகிறது. அதை உரிமைத் தொகை என்றுதான் கொடுக்கிறோம். அதைக் கொடுப்பதால் உடனே அது வாக்காக மாறிவிடும் என சொல்ல முடியாது. அப்படி என்றால் இத்தனை ஆண்டுகள் அரசு செய்த நலத் திட்டத்தை வைத்து யார் ஓட்டுப் போட்டுள்ளார்கள். நலத் திட்டத்தால் ஒரு அரசை மக்கள் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்ததாகத் தரவுகள் இல்லை. ஒரு ஆட்சி முடிந்தால் அதன் திட்டத்தை மக்கள் மறந்துவிடுவார்கள். அதற்காக இந்த 1000 ரூபாய் வழங்கப்படவில்லை.
மது ஒழிப்பு என்பதை இங்கே புனிதப்படுத்துகிறார்கள். ஏதோ மது வருமானத்தை வைத்துத்தான் அரசாங்கமே நடக்கிறது என்பதைப் போல் ஒரு கருத்தைக் கட்டமைக்கிறார்கள். அது ஒரு மாயை. அப்படி இல்லை. மது ஒழிப்பு என்பது உலகத்தில் எங்கேயும் வெற்றிகரமாக நடந்தது இல்லை. உடனே குஜராத் என்பார்கள். அங்கே போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அம்மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று? பீகாரில் கூட அந்தக் கொள்கை தோல்வியை அடைந்ததால்தான் பிரசாந்த் கிஷோர் அதனால் எவ்வளவு வருமாய் இழப்பு என்பதைப் பற்றி பேசியிருக்கிறார்.
குடி என்பது ஒரு சமூகப் பிரச்சினை. அதை அதன் போக்கில்தான் அணுகமுடியும். அரசு நினைத்தால் கடையை மூடிவிட முடியாது. பிறகு கள்ளச்சந்தை கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். திருடனை நாம் பிடித்து சிறை போடுகிறோம். அவனுக்குத் தண்டனை அளிக்கிறோம். அப்படி என்றால் திருட்டை ஒழித்துவிட்டோமா? அது இருக்கத்தானே செய்கிறது. எனவே அரசு நினைத்தால் மதுவை உடனே ஒழித்துவிடலாம் என்பது ஒரு கற்பனை.
எப்படி லஞ்சத்திற்கு எதிராக, புகைப்பழக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோமோ அதை மாதிரி இதற்குச் செய்யலாம். மது ஒழிப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதன் கையிலும் உள்ளது. அரசு மட்டுமே அதைச் செய்துவிட முடியாது. மது என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகச் சுருக்கக்கூடாது.அப்படிச் செய்தால் மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் போய் முடியும். மது ஒழிப்பை எப்படி பசுமை பாதுகாப்பு என்று ஒன்றைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோமோ அதைப் போல் நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சில ஆண்டுகள் முன்பு பொதுவான பொருளாதார நிபுணராக ஊடகங்களில் பங்கேற்று வந்த ஜெயரஞ்சன், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் ஒரு அங்கமாக மாறியுள்ளார். இதனால் ஒரு கட்சி சார்ந்த நபராக உங்களை அடையாளப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அது உங்களைப் பாதிக்கவில்லையா என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு அவர், பொருளாதார சார்ந்து இயங்கக் கூடியவர்கள் அரசியல் நிலைப்பாடு எடுக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. நான் பேசக் கூடிய விசயங்கள் கட்சி சார்ந்து பார்த்து என்னை விமர்சிக்கலாம். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்குக் கட்சி சார்பு இல்லை என்று நான் எங்கேயும் சொன்னதே இல்லை. என் அரசியல் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி அரசியல் சாராமல் ஒருவரால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
சாதாரண அரசு சார்ந்த பள்ளியில் படித்துவிட்டு ஆய்வுத்துறைக்கு வந்தவன் நான். எம்ஐடிஎஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. அங்கே பிஹெச்டி செய்துவிட்டதால் உடனே உயர்மட்டத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உடனே என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கே நான் புறக்கணிக்கப்பட்டுள்ளேன். அதை நினைத்து நான் ஒரு நாள்கூட கவலை கொண்டதில்லை" என்றும் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications