எல்லாம் அமித்ஷாவிற்காக.. அதிமுக எம்பி ஏன் அப்படி சொன்னாரு? ரெடியாகும் அமைச்சர் பதவி.. சபாஷ் சபாஷ்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் வெல்லும்பட்சத்தில் பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவிகளை பெற அதிமுக தரப்பினர் அடிபோட்டு வருகிறார்களாம்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் புயலை கிளப்பி உள்ளது. அதேபோல் ஒரு பக்கம் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதங்களும் நடந்து வருகின்றன.

இன்னொரு பக்கம் டெல்லி யூனியன் பிரதேச நிர்வாக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. டெல்லி நாட்டின் யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது.
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. எனினும், உச்ச நீதிமன்றம் உத்தரவு வெளியான உடனேயே, இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த நிலையில்தான் அதன் மசோதா முன்பு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு திமுக , காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. : டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு ஜனநாயகத்திற்கு விரோதமானது. நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று திமுக எம்பி சிவா பேசினார். அதே சமயம் இந்த மசோதாவிற்கும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
அமித் ஷாவிற்காக: டெல்லி நிர்வாக திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசியது தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. இது அமித் ஷா கொண்டு வந்த மசோதா அமித் ஷாக்காக இதை ஆதரிக்குறோம், என்று வெளிப்படையாக கூறி பாஜக மனதை அதிமுக குளிர வைத்தது. அவரின் பேச்சும், அதிமுகவின் பாஜக ஆதரவு நிலைப்பாடும் நேற்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுகவின் ஆதரவு இல்லை என்றால் ராஜ்ய சபாவில் நேற்று இந்த மசோதா வெற்றிபெற்று இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்கெடுப்பில் அமித் ஷாவிற்காக செய்கிறோம் என்று தம்பிதுரை கூறியது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
என்ன பிளான்?: தம்பிதுரை இப்படி பேசுவதற்கு பின் முக்கிய காரணம் உள்ளது என்கிறார்கள். 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் வெல்லும்பட்சத்தில் பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவிகளை பெற அதிமுக தரப்பினர் அடிபோட்டு வருகிறார்களாம்.
சமீபத்தில் பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை 26 கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. நேற்று நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக என்டிஏ கூட்டணியை பாஜகவும் புதுப்பித்து உள்ளது. இதில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. இந்த நிலையில்தான் ஒருவேளை 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் தனியாக ஆட்சி அமைக்காமல் கூட்டணியோடு ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் அதிமுக சார்பாக அதிக இடங்களை அமைச்சர் பதவிக்கு பெற வேண்டும் என்ற திட்டம் இருக்கிறதாம். ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் தம்பிதுரையும் எப்படியாவது அமைச்சராகிவிட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம். இதன் காரணமாகவே அமித் ஷாவிற்காக வாக்களிக்கிறேன் என்றெல்லாம் கூறி தம்பிதுரை தாஜா செய்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் இன்னும் சில ராஜ்ய சபா எம்பிக்கள் அமைச்சர் பதவிக்கு அடிபோட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications