அந்த 6வது பாயிண்ட்.. லீக்கான எடப்பாடியின் மெகா திட்டம்! வருகிறது "தேர்தல்".. முடிவிற்கு வரும் ஆட்டம்
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட உள்ள 16 தீர்மானங்கள் என்னென்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதில் 6வது தீர்மானம்தான் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதிமுக தலைமைக்குழு சார்பாக இதற்காக கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழுவிற்கு எதிராக வழக்குகளை தொடுத்துள்ள நிலையில்தான் இந்த பொதுக்குழு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

லீக்கானது
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 16 தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் கசிந்து உள்ளன. அவை பின்வருமாறு,
1. கழக அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு
2. 'பாரத் ரத்னா' விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்,
3. கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக,

முக்கியமான தீர்மானங்கள்
4. கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக.
5. கழக இடைக்காலப் பொதுச் செயலாளரை, நடைபெற உள்ள கழகப் பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக.
6. கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுதல்
சம்பந்தமாக.

ஏன் முக்கியம்?
இதில் 4, 5, 6 தீர்மானங்கள் முக்கியமானது ஆகும். கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கப்படுகிறது. கழக இடைக்காலப் பொதுச் செயலாளரை, நடைபெற உள்ள கழகப் பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக முடிவு எடுக்கப்படுகிறது. அதோடு கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக முடிவு எடுக்கப்படுகிறது. இதன் அர்த்தம் கட்சியில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கும்.

தேர்தல்
அதாவது தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். அதன்பின் அந்த பதவிக்கு தேர்தல் நடக்கும். அவர் வேட்பாளராக போட்டியிடுவார். இதன் மூலம் சட்ட ரீதியாக தொண்டர்கள் மூலம் முறையாக தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவரின் நியமனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தாலும் அது கோர்டில் நிற்காது.

ஓபிஎஸ்
இதில் ஓபிஎஸ்ஸும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். ஆனால் தற்போது பெரிய அளவில் நிர்வாகிகள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இருக்கிறது. தொண்டர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். அது தேர்தல் நடந்தால் வாக்குகளாக மாறுமா என்று தெரியவில்லை. அதோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி, ஓபிஎஸ்ஸை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கினால், ஓபிஎஸ்ஸால் தேர்தலிலேயே போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற தீர்மானங்கள்
இது போக பின் வரும் தீர்மானங்கள் அதிமுகவில் நிறைவேற்றப்பட உள்ளன.
7. கழகத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டுதல் சம்பந்தமாக,
8. புரட்சித் தலைவர் வழியில், மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சியின்
சாதனைகளும்; திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் தலைமையில் செயல்பட்ட மாண்புமிகு அம்மா அரசின் வரலாற்று வெற்றிகளும்.
9.அம்மா அரசின் மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்யும், விடியா திமுக அரசுக்குக் கண்டனம்.
10. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய, மக்கள் விரோத திமுக அரசுக்குக் கண்டனம்.
11 சட்டம், ஒழுங்கை பேணி காக்கத் தவறிய திமுக அரசுக்குக் கண்டனம்.

அரசுக்கு கண்டனம்
12.மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்.
13. இலங்கைத் தமிழர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்
14. . அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு வலியுறுத்தல்,
15.நெசவாளர்களின் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
16. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்குக் கண்டனம்... ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications
