அடிச்சாங்க பாருங்க.. டி.ஆர். பாலுவுக்கு ஸ்கெட்ச்.. அதுதான் பாஜக பாணி! இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?
சென்னை: படுஸ்மார்ட்டாக வேலையை பார்த்து வருகிறது தமிழக பாஜக.. திராவிட கட்சிகளுக்கு "செக்" வைக்கும் முயற்சியையும் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி கொண்டே வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. பிரச்சாரங்கள் அனலடித்து கொண்டிருக்கின்றன.. முக்கிய தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் "வலை"யை வீசுவதும் அதிகரித்து கொண்டிருக்கின்றன.

முதலிடம்: வழக்கமாக தேர்தல் சமயத்தில் இதுபோன்று மாற்று கட்சிகளில் உள்ளவர்களை "கொக்கி" போட்டு இழுப்பது இயல்புதான் என்றாலும், இதில் அனைத்து கட்சிகளையும்விட எப்போதுமே முதலிடத்தில் உள்ளது பாஜகதான். வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த யுக்தியை பயன்படுத்தி, பெருத்த பலனையும் பாஜக பெற்று வருவதை மறுக்க முடியாது.
தேர்தல் சமயத்தில், பலவிதமான நெருக்கடிகளை தருவது, அல்லது பெரிய பதவி, பெரிய பொறுப்புகளை வழங்குவது உள்ளிட்ட வியூகங்களை கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கட்சிக்குள் கொண்டுவருவது என்பது பாஜகவின் ராஜதந்திரங்களில் ஒன்றாக உள்ளது..
அதாவது, அனைத்து கட்சிகளுமே தேர்தல் நேரத்தில் அரசியல் செய்யும் என்றால், பாஜக மட்டும் தேர்தலுக்கு பிறகும் அரசியல் செய்யும் என்பதற்கு பல்வேறு மாநில "கூட்டணி" ஆட்சிகளே சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றன. இதற்கு நம்முடைய புதுச்சேரி ரங்கசாமியும் விலக்கல்ல.
5 தாமரைகள்: இப்போது விஷயம் என்னவென்றால், இந்த முறை தேர்தலில் எப்படியும் 5 தாமரைகளை தமிழகத்திலிருந்து டெல்லிக்கு அனுப்பிவிடுவது என்ற முடிவில் பாஜக உள்ளது.. தென்மாவட்டங்களில் காலூன்றுவதுடன், டபுள் டிஜித் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதிலும் வடமாவட்ட ஓட்டுக்களுக்காக பாமகவையே பெரிதும் நம்பி உள்ளதாக தெரிகிறது.
ஒருபக்கம் திமுகவை டேமேஜ் செய்துகொண்டே மறுபக்கம் அக்கட்சிக்கு நெருக்கடி தரும் முயற்சியையும் கையிலெடுத்துள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், ஒரு தகவல் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
மூத்த தலைவர்: அதாவது, திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகளை, பாஜகவுக்குள் கொண்டுவரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறதாம். டி.ஆர்,பாலுவை பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நம்பிக்கையானவர்.. இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியின் அரசியல் நிழல் என்றுகூட சொல்லலாம்.
1980-களிலேயே டிஆர் பாலுக்கென்றே ஒரு தனி செல்வாக்கு கட்சியில் உருவானது. திமுகவை சென்னையில் ஒரு பலம் பொருந்திய அமைப்பாக மாற்றியதில் முக்கிய பங்கு டி.ஆர்.பாலுவுக்குத்தான் போய்ச்சேரும்.
முக்கிய காரணம்: நான்கு வழிச்சாலைகள் இன்று நாடு, நகரம் முழுவதும் உருவாகி இருப்பதற்கு டி.ஆர்.பாலுவும் ஒரு முக்கிய காரணமாகும்.. தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையே பாலமாக இருந்து திமுக வளர்ச்சிக்கு உதவியவர்... தற்போதும் உதவிக்கொண்டிருப்பவர். டெல்லியில் அதிக செல்வாக்கோடும், கட்சி ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும் செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றவர் டி.ஆர்.பாலுதான்!
இப்போதுகூட, மக்களவையில் திமுகவின் குரலை அழுத்தமாக ஒலித்து, நறுக் நறுக் கேள்விகளால் பாஜக திணறடித்து வருகிறார்... அதுமட்டுமல்ல, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் முயற்சியில் டி.ஆர்.பாலுவின் பங்கு அதிகமானது என்றே சொல்லலாம்.
பாஜக: இப்படிப்பட்ட டிஆர் பாலுவுக்கும், திமுகவுக்கும் இடையே "குடைச்சலை" தர பாஜக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்காகவே, டி.ஆர்.பாலுவின் மகளை பாஜகவில் இணைக்கவும் திட்டமிட்டு வருகிறதாம்.. அதாவது, டி.ஆர்.பாலுவின் மற்றொரு மனைவியின் மகள் மனோன்மணி... தற்போது டிஆர் பாலுவுடன் இவருக்கு இணக்கமான உறவு இல்லை என்று சொல்கிறார்கள். அதனால்தான், இவரை பாஜகவுக்குள் கொண்டுவர முயற்சி நடக்கிறதாம்.
அத்துடன், டி.ஆர்.பி.ராஜாவுக்கு எதிராக மனோன்மணியை பிரச்சாரத்தில் பயன்படுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாம். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், இதற்கும் நிறையவே சான்ஸ் இருப்பதாக சொல்கிறார்கள்.
பாஜக பிளான்: ஆனால், யார் யார் குடும்பத்தில் விரிசல் உள்ளதோ, அந்த விரிசலையே "அரசியல் ஆயுதமாக' பயன்படுத்துவது எந்த அளவுக்கு தேசிய கட்சியான பாஜகவுக்கு பலன்தரும் என்று தெரியவில்லை. காரணம், அன்றைய அதிமுகவில் மூத்த தலைவர் தாமரைக்கனியின் அரசியல் வரலாறை, இந்த தமிழகம் லேசில் மறந்திருக்காது. இதே பாணி அரசியல் பாஜகவுக்கும் தமிழகத்தில் ஒர்க் அவுட் ஆகுமா? என்று தெரியவில்லை.
ஏற்கனவே, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார்.. திருச்சி சிவாவுடன் இணக்கமான போக்கு மகனுக்கு இல்லை என்று செய்திகள் கசிந்திருந்த நிலையில்தான், சூர்யா பாஜகவில் இணைந்தார்.. இப்போது, அடுத்த குறி டி.ஆர்.பாலுவின் குடும்பத்தில் விழுந்துள்ளது.
ரிசல்ட் என்ன: ஒருவேளை, டிஆர் பாலு மகள் மனோன்மணி, பாஜகவிலேயே இணைவதாகவே வைத்துக் கொண்டாலும், இதனால் திமுகவுக்கு நெருக்கடியை தந்துவிட முடியுமா? என்றும் தெரியவில்லை.. டி.ஆர்.பாலுவின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, வாக்கு அரசியலில் பெருத்த லாபம் கிடைக்குமா? என்றும் தெரியவில்லை.
காரணம், பாதிக்கப்பட்ட வெகுஜன மக்களின் பக்கம் நின்று, அவர்களின் வாழ்வுக்காகவும், நன்மைக்காகவும் பாடுபடுபவர்களே, ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்களின் மனதை வென்று வருகிறார்கள் என்பதையும், இங்கு நாம் அழுத்தமாக நினைவுகூர வேண்டியிருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications