அரசியல் "வாரிசுக்கே" இடமில்லையா? சுற்றலில் விட்ட சித்தி.. "துணிவாக" இறங்கிய டிடிவி.. புதிய அவதாரம்!
சென்னை: சசிகலாவுடன் முரண்பட்டிருக்கும் நிலையில் தனது அரசியலை மட்டுமே தூக்கி நிறுத்தும் வகையில் தனக்கே தனக்கான ஒரு சேனலை துவக்கவிருக்கிறார் தினகரன் என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசியல் சூழலில் செய்தி சேனல்கள் தங்களுக்கு என்று ஒரு டிவி சேனல் வைத்துக்கொள்வது மிக முக்கியம். கிட்டத்தட்ட பெரிய கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு என்று தனியாக டிவி சேனல்களை வைத்து இருக்கின்றன.

தங்கள் கட்சி கொள்கைகளை பரப்ப, தங்களுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட என்று பெரிய கட்சிகள் தங்களுக்கு என்று சேனல்களை வைத்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவில் இதுதான் டிரெண்ட்.
இந்த நிலையில்தான் தனக்கே தனக்கான ஒரு சேனலை துவக்க விருக்கிறார் தினகரன் என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து தற்போது நலிவடைந்துள்ள ஒரு சேனலை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறதாம் தினகரன் தரப்பு. ஏன் தினகரன் இப்படி திடீரென முடிவை எடுத்தார். அவரின் இந்த முடிவிற்கு பின் என்ன காரணம்? என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்.
இதற்கான காரணங்களை அவர்கள் அடுக்கினார்கள்.

ஜெயா டி.வி.யின் உரிமையாளராக இருப்பவர் சசிகலா. அவர் சிறைக்கு செல்லும் போது, ஜெயா டி.வி.யின் நிர்வாக பொறுப்பினை இளவரசியின் மகன் விவேக்கிடம் கொடுத்துச் சென்றார் சசிகலா. கே.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிப் பெற்றதற்கு பிறகு அ.தி.மு.க.வில் அவரது செல்வாக்கு அதிகரித்தது.
இதனை பயன்படுத்தி ஜெயா டி.வி.யின் நிர்வாகத்துக்குள் தனது மனைவி அனுராதாவை மீண்டும் கொண்டு வந்து விட வேண்டும் என்றும், நிர்வாகத்தின் மொத்த பொறுப்பும் தம்மிடம் வர வேண்டும் என்றும் திட்டமிட்டு காய்களை நகர்த்தினார் தினகரன். ஆனால், இதற்கு சசிகலா சம்மதிக்கவில்லை. இப்போது வரை தினகரனின் திட்டம் பலிக்கவில்லை.
சேனலும் இப்போது வரை கைமாறவில்லை. சசிகலாவும் வெளியே வந்துவிட்டார். இதனால் சேனல் நடவடிக்கைகளை சசிகலா நேரடியாக கண்காணித்து வருகிறார். இந்த நிலையில்தான், தற்போது திவாகரனுக்காக தன்னை சித்தி ஓரங்கட்டுகிறார் என்பதை உணர்ந்து சசிகலாவிடமிருந்து விலகியுள்ளார். சசிகலாவும் அரசியல் ரீதியாக தினகரனுக்கான முக்கியத்துவம் தராமல் ஓரங்கட்டி வைத்துள்ள நிலையில், ஜெயா டி.வி.யில் தினகரன் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம்.
இதனையேற்று, தினகரன் தொடர்பான நிகழ்வுகளை முற்றிலுமாக புறக்கணிக்காமல் மெல்ல மெல்ல குறைத்துக் கொள்ளத் துவங்கியுள்ளதாம். இது குறித்து அறிந்து கவலைப்படாத தினகரன், தனக்கென ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி நடத்தி வருவது போல, தனக்கான ஒரு டி.வி.சேனலை உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான முயற்சியில் குதித்துள்ளார்.

ஏற்கனவே தினகரன் சசிகலா மீது வேறு காரணங்களுக்காக அப்செட்டில் இருக்கிறார். உதாரணமாக சசிகலா சிறையில் இருந்து வந்ததும் ஆக்டிவ் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். முக்கியமாக தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்தே விலகி இருப்பதாக அறிவித்தார். இதை டிடிவி தினகரன் சுத்தமாக விரும்பவில்லை. அப்போது டிடிவி தினகரன் நேரில் போய் பேசியும் கூட சசிகலா தனது முடிவை மாற்றவில்லை.
இதன் பின்பும் சசிகலாவின் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை டிடிவி தினகரன் விரும்பவில்லை. கிட்டத்தட்ட சசிகலாவின் அரசியல் வாரிசாக கருதப்பட்டவர் டிடிவி. ஆனால் இப்போது இவர்கள் இருவருக்கும் இடையிலேயே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அரசியலில் தனி பாதையில் சென்று கொண்டு இருக்கும் தினகரன் இப்போது சேனல் தொடங்கும் திட்டத்திலும் இறங்கி உள்ளார். விரைவில் தினகரனுக்கான சேனல் தமிழகத்தில் அவதாரமெடுக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications