IT ஊழியர்கள் பாவம்யா.. பணி நீக்க நடவடிக்கையின் ஷாக் பின்னணி.. ‛Silent Layoffs'-னா என்ன தெரியுமா?
சென்னை: டிசிஎஸ், அக்சென்ச்சர் உள்பட பல்வேறு ஐடி நிறுவனங்களில் தற்போது ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டில் மட்டும் 50 ஆயிரம் ஐடி ஊழியர்கள் வேலையை இழக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐடி நிறுவனங்கள் ‛Silent Layoffs' என்ற முறையை பின்பற்றி வருகிறது. ஐடி ஊழியர்களை தூங்கவிடாத இந்த ‛சைலன்ட் லேஆஃப்' என்பது என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நம் நாட்டில் தனியார் துறையில் பல இளைஞர்கள், இளம்பெண்கள் ஐடி துறை பணியை கனவாக கொண்டுள்ளனர். உயர்ந்த கண்ணாடி மாளிகையில் குளுகுளு ஏசி வசதியில் மனதுக்கு நிறைவான சம்பளம் கிடைப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகும். அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்பட பிற வெளிநாடுகளுக்கும் செல்லும் வசதி கிடைக்கும்.

இதனால் தான் கல்லூரியில் எந்த படிப்பை படித்தாலும் ஐடி நிறுவனத்தில் பணியாற்ற தனி படிப்பை படித்து பலரும் அந்த துறைக்குள் நுழைகின்றனர். ஆனால் இப்போது ஐடி துறையை ஆபத்து சூழ்ந்துள்ளது. பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து வருகின்றன.
கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட், அக்சென்ச்சர், டிசிஎஸ், உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கிய பணி நீக்க நடவடிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.
இப்போது மீண்டும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கி உள்ளன. டிசிஎஸ் ஐடி நிறுவனம் தனது பணியாளர்களில் 2 சதவீதம் பேரை பணி நீக்க திட்டமிட்டு அதற்கான பணியை தொடங்கிவிட்டது.
அதேபோல் பிற ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை கட்டாய ராஜினாமா அல்லது பணியில் இருந்து நீக்கி வருகின்றன. தற்போது ஐடி நிறுவனங்கள் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதிகரித்து இருப்பது, செலவுகளை குறைப்பது, ஊழியர்களின் திறன் மேம்பாடு அடையாமல் இருக்கிறது என்று கூறி பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் 50 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளலாம். இல்லாவிட்டால் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள வேலையிழக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். நமது வேலையும் போய்விடுமோ? என்ற அச்சத்தில் ஐடி ஊழியர்களை ஒவ்வொரு நாட்களையும் கடந்து வருகின்றன.
தற்போது ஐடி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை ‛Silent Layoffs' என்ற முறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த ‛சைலன்ட் லே-ஆஃப்' தான் தற்போது ஐடி ஊழியர்களை தூங்க விடாமல் செய்து வருகிறது. ‛சைலன்ட் லே ஆஃப்' என்பது என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். அதாவது ‛சைலன்ட் லேஆப்' என்பது முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் முறையாகும்.
இதனை ஐடி நிறுவனங்கள் பல வழிகளில் செயல்படுத்துகின்றன. அதன்படி ஏஐ பயன்பாட்டை அதிகரிப்பது, புதிய தொழில்நுட்பங்களை கற்க காலஅவகாசம் வழங்காமல் பிரஷர் போடுவது, ஊழியர்களை பணியில் வைத்து கொண்டே சில காலம் புராஜெக்ட்டுகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பது அல்லது கூடுதல் நேரம் வேலை வாங்குவது உள்ளிட்டவற்றை ஐடி நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன. இதன்மூலம் ஊழியர்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும்.
வழிமுறைகளை பின்பற்றுகின்றன. இதனால் ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு, அவர்களாகவே பணி வேண்டாம் என்று ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம். இப்படி ஊழியர்களை வெளியேற வைப்பது தான் ‛சைலன்ட் லேஆஃப்' முறையாகும். இதன்மூலம் ஐடி நிறுவனங்களுக்கு தான் லாபம். ஏனென்றால் திடீரென்று ஒரு ஊழியரை முன்னறிவிப்பு இன்றி வேலையில் இருந்து நீக்கும்போது அவர்களுக்கு சில மாத சம்பளத்தை வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால் அந்த ஊழியர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறலாம். ஆனால் ‛சைலன்ட் லே ஆஃப்' முறையை பின்பற்றும்போது ஊழியர்கள் தாமாகவே வெளியேறுவார்கள் என்பதால் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நிறுவனங்கள் எளிமையாக தப்பிக்க முடியும். இதனால் தான் தற்போது ‛சைலன்ட் லேஆஃப்' பல நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது. இது ஐடி ஊழியர்களுக்கு பெரும் ஆபத்தாக இப்போது இருக்கிறது.
அதேவேளையில் இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடக்கூடாது. சில நிறுவனங்கள் மாற்று பணியை தேட ஊழியர்களுக்கு காலஅவகாசம் வழங்கிவிட்டு வேலையில் இருந்து தூக்குகின்றன. அதாவது ஊழியருக்கு முன்கூட்டியே பணி நீக்கம் செய்யப்படுவது பற்றி கூறிவிட்டு வேறு வேலையை தேட அனுமதி வழங்குகின்றன.
அதேபோல் இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு மாற்று வேலை தேட வசதியாக சில மாத சம்பளத்தை வழங்கி விடுகின்றன. இப்படியாக தொடர்ந்து ‛சைலன்ட் லேஆஃப்' முறையை ஐடி நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications