தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 90% பேர் தடுப்பூசி போடாதவர்கள்...சுகாதாரத்துறைச் செயலர் தகவல்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் கடந்த இரண்டு மாதங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எனக் கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன்.
தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை தீவிரமாக நடைமுறைப்படுத்தி அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் இவர்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நல்ல பலனை தருவதோடு வெற்றியும் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

மேற்கு மாவட்டங்கள்
மேலும், மேற்கு மாவட்டங்களில் முன்பைக் காட்டிலும் இப்போது தொற்றுபரவல் குறையத் தொடங்கியிருப்பதாகவும் இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 3.5% பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார். அதுவும் கொரோனாவோடு மற்ற இணை நோய்களுக்கும் அவர்கள் உட்பட்டிருந்ததால் இந்த இறப்பு நிகழ்ந்ததாக விளக்கம் அளித்தார்.

அபாயக்கட்டம்
மேலும், ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்களில் 7.4% பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறிய அவர், தடுப்பூசி போடாதவர்களே 90% கொரோனாவிலிருந்து மீள முடியாமல் உயிரிழந்ததாகவும் கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அபாயக் கட்டத்தில் சிகிச்சை பெறுவோர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது தெரியவருவதாக கூறினார்.

சிகிச்சை பெறுவோர்
ஒரு காலத்தில் 3 லட்சமாக இருந்த கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று 17 ஆயிரம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளதாகவும் டெல்டா வகை கொரோனா வைரஸை தவிர புதிதாக வேறு எந்த வகை வைரசும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்திருக்கிறார்.

டெங்கு
கொரோனாவை மையமாக வைத்து சிலர் சமூக வலைதளங்களில் பீதியை உருவாக்கும் வகையில் கருத்து பதிவிட்டு வரும் சூழலில், சுகாதாரத்துறை செயலாளரின் இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது மழைக்காலம் வரவுள்ளதால் கொரோனாவுடன் டெங்கு ஒழிப்பு பணிகளையும் தொடங்கியுள்ளதாக கூறிய அவர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உரிய முறையில் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

தீவிர கவனம்
தமிழகத்தில் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த நடவடிக்கை தொடங்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டெங்குவால் தமிழகத்தில் 2 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர் கொரோனா, டெங்கு என இரண்டுக்கும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications