ஊழல்வாதிக்கு துணை போகலாமா? சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதவி நீட்டிப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாபநாசம் தொகுதியின் எம்எல்ஏ ஜவாஹிருல்லா தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக் காலம் ஜூன் 30-ம்தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அவரை ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் எனஅடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஒருவரை மீண்டும் பதவி நீட்டிப்புசெய்திருப்பது ஏற்புடையது அல்ல.
தனது பொறுப்பை உணராமல் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக இவர் மீது கடும்குற்றச்சாட்டுகள் உள்ளன. இது குறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

பல்கலைக்கழகத்தின் தொழிலாளர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து துணைவேந்தருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறைக்கு எதிரான நிலைப்பாட்டைத் தான் ஆளுநர் ரவி செய்துகொண்டிருக்கிறார். இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களின் வருகை தொடங்க இருக்கும் நேரத்தில் இது போன்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது.
ஊழல்வாதிக்குத் துணை போகும் ஆளுநரைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஜெகநாதனின் பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான முயற்சிகள் நடந்ததை அடுத்து அவரது பதவிகாலத்தை நீட்டிக்க தமிழக அரசு விடாது என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி அவருடைய பதவிக்காலத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட்டித்து உத்தரவிட்டார்.
இதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று திங்கள்கிழமை ஜெகநாதன் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றுக் கொண்டார்.
குற்றச்சாட்டுகள் என்ன: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு செலவில் அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்படுத்தியதாகவும், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை ஜெகநாதன் தொடங்கியதாக புகார் எழுந்தது. பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கி உள்ளார் துணைவேந்தர் ஜெகநாதன். அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் ஜெகநாதன் நண்பர்களுடன் இணைந்து பங்குதாரராக இருந்தார். இது உறுதி செய்யப்பட்டதால் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜனவரி மாதம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணிநீட்டிப்பு வழங்க எதிர்ப்பு கிளம்பியது.












Click it and Unblock the Notifications