முதல்வர் கான்வாயில் தொங்கிய தொங்கல் மேயர் பிரியா.. மாஜி அமைச்சர் கடும் விமர்சனம்
சென்னை: முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்னை மேயர் பிரியா சென்ற வீடியோவை பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மேயர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவானது. அது கடந்த 7 ஆம் தேதி தீவிர புயலாக மாறியது. மாண்டஸ் என்று பெயரிடப்பட்டது. இந்த புயலால் தமிழகத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை ஆகிய இடங்களில் மழை பெய்தது.
இந்த புயல் மகாபலிபுரம் அருகே கடந்த 9ஆம் தேதி இரவு முதல் 10 ஆம் தேதி அதிகாலை வரை கரையை கடந்தது. இது அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தாவிட்டாலும் நல்ல மழையை கொடுத்தது. இந்த புயலால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. தரைக்காற்று பலமாக வீசியது.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்ற முதல்வர் சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார்.

நிவாரண உதவிகள்
மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் போது சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாஜக- அதிமுக
இந்த காட்சிகளை பார்வையிட்ட அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார். அவர் கூறுகையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல.

துணிச்சலை பாருங்கள்
அதை அவரது துணிச்சலாக பாருங்கள். ஆய்வின்போது முதல்வருடன் செல்ல வேண்டும் என்பதற்காக சென்னை மேயர் பிரியா துணிச்சலுடன் முதல்வரின் கான்வாய் வாகனத்தில் ஏறியிருந்தார் என விளக்கமளித்தார். இருப்பினும் இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில் சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது.

ரிப்பன் வெட்டுதல்
முதல்வர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில் ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை நீட்டிக் கொண்டு நிற்கிறார். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக் கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார். மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இரும்பு பெண்மணி என அழைக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சி செய்த இந்த தமிழ் மண்ணில் பெண்ணுக்கு அதுவும் உயர் பதவியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு இழுக்கு ஏற்பட்டுள்ளது என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே ஒரு பிரஸ்மீட்டில் அமைச்சர் கே.என். நேரு, சென்னை மேயர் ஆர் பிரியாவை ஒருமையில் பேசி மிரட்டியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் பிரியாவோ அவர் எனக்கு தந்தை போன்றவர், அதனால் அப்படி அழைப்பதில் எந்த தவறுமில்லை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications