மார்ச் 5 முதல் 12 வரை.. ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5, 6, 7, 10, 11, 12ம் தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா வரும் பிப்.24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எம்ஜிஆருக்கு பின் அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களுக்கு சொல்லும் வகையில் கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.
எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவுக்கு திட்டமிட்ட போதே, ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பற்றியும் பல்வேறு மாவட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது. இதன் காரணமாக வரும் 24ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுக தொண்டர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா பிறந்தநாள்
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5, 6, 7, 10, 11, 12ம் தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதிமுக அலுவலகம்
அதேபோல் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா நாளன்று அதிமுகவின் தலைமை அலுவலகம் செல்லும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதன் பின்னர் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 நாட்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடக்க உள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்க உள்ளது. அதன் பின்னர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் 6 நாட்கள் நடக்க உள்ளது. அப்போது ஜெயலலிதாவின் சாதனைகளையும், அதிமுகவின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட உள்ளது.

கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இணைந்து இருந்த நிலையில், ஒருவரும் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் இருவரும் ஒன்றாக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவதால், இரு தரப்பும் தனித்தனியே ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட உள்ளது.












Click it and Unblock the Notifications