தமிழகத்தின் ஆளுமை ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று.. நினைவு கூர்ந்த ரத்தத்தின் ரத்தங்கள்
சென்னை:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிகத்தில் உள்ள மிகப்பெரிய கழகங்களில் ஒன்றான அதிமுகவில் எம்ஜிஆரை தொடர்ந்து மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா. அவரது பிறந்த நாள் இன்று தமிழகத்தில் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மரக்கன்றுகள் நடும் திட்டம்
அதனை தொடர்ந்து... வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்வுகளும் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றன.

நினைவிடத்தில் மரியாதை
பின்னர்,ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு அனைவரும் சென்றனர். அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கணவர் மாதவனுடன் சென்ற அவர் மரியாதை செலுத்தினார்.

மாவட்டங்களில் பிறந்தநாள் விழா
சென்னையை போன்றே தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்
மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் அதிமுக கொடிகள் ஏற்றப்பட்டு.. ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அன்னதான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நினைவு கூர்ந்த தொண்டர்கள்
கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர். தமிழகத்துக்காகவும், மக்களுக்காகவும் அவரது ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்தனர்.












Click it and Unblock the Notifications