"கல்லுக்குள் ஈரம்"! தென்றல் வந்து தீண்டும் போது... பாடிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! இளையராஜா வாய்ஸ்
சென்னை: தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுலே... என்று இளையராஜா பாடிய பாடலை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அச்சு அசலாக அப்படியே பாடி காட்டினார். நீதிபதிக்குள் இப்படி ஒரு திறமை ஒளிந்திருக்கிறதா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளின் மூலம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

அவருடைய தீர்ப்பை விட யாராக இருந்தாலும் ஒரு குட்டு வைப்பார். அதைத்தான் பலர் ரசித்து வருகிறார்கள். அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி உள்ளிட்டவர்களுக்கு எதிரான முறைகேடு வழக்குகளை தாமாகவே முன் வந்து விசாரித்து வருகிறார்.
அண்மையில் கடந்த சில நாட்களாக இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றலாகிவிட்டார். இதனால் சிலர் அப்பாடா என பெருமூச்சு விட்ட நிலையில் அவர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே திரும்பினார், விட்ட கேசுகளை தூசு தட்டி எடுத்து விசாரணை நடத்தி வருகிறார். இவர் மீது ஆர்.எஸ்.பாரதி நேரடியாக குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட அமைச்சர்களை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்த போதிலும் அவர்கள் வழக்கில் ஒரே மாதிரியான நடைமுறையை கீழமை நீதிமன்றங்கள் பின்பற்றியுள்ளனர் என்றும் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை படித்து பார்த்துவிட்டு என்னால் 3 நாட்கள் தூங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
"நீதிமன்றம் ஒரு கட்சிக்கோ அரசுக்கோ சொந்தமானது இல்லை. சாதாரண குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரியது" என்றெல்லாம் கோடிட்டு பேசி அதிரடிகளை காட்டியவர். இவரிடம் ஒரு வழக்கு சென்றால் எந்த மாதிரியான விமர்சனங்களை முன் வைப்பாரோ என்ற அச்சம் தோன்றும் அளவுக்கு இவர் அதிரடி காட்டினார்.
அது போல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கிலும் பல்வேறு கறார் கருத்துகளை முன் வைத்திருந்தார். இப்படிப்பட்ட "கறார் நெஞ்சருக்கு (தவறு செய்பவர்களுக்கு மட்டும்)" மற்றொரு தனித்திறமையும் இருக்கிறது. அது தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அவதாரம் படத்தில் வரும் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல என்ற பாடலை முழுவதுமாக பாடியிருந்தார். கண்களை மூடி கேட்டால் அவரது குரல் அப்படியே இளையராஜாவை போல் இருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஆனந்த் வெங்கடேஷ் கருப்பு நிற பேன்ட் சர்ட் அணிந்து கொண்டு தலையை ஆட்டியும் உடலை அசைத்தப்படியும் நேர்த்தியாக பாடினார்.
அண்மையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இளையராஜாவின் "சின்ன மணிக்குயிலே" என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லுக்குள் ஈரம் இருப்பதை போல் தவறு செய்தவர்களுக்கு கறாராக தீர்ப்புகளை சொல்லும் நீதிபதி ஆனந்திடமும் இப்படி ஒரு திறமையா என ஆச்சரியப்பட வைக்கிறது.


Click it and Unblock the Notifications
